Last Updated : 23 Jun, 2021 05:54 PM

 

Published : 23 Jun 2021 05:54 PM
Last Updated : 23 Jun 2021 05:54 PM

குமரி அருகே வனப்பகுதியில் சிகிச்சையின்போது இறந்த பெண் யானையின் உடற்கூறுகள் ஆய்வுக்கு அனுப்பிவைப்பு

தடிக்காரன்கோணம் வனப்பகுதியில் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையின்போது இறந்த யானையின் உடற்கூறுகள் வனத்துறையினரால் ஆய்விற்கு அனுப்பி வைக்கப்பட்டன.

மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதியில் இருந்து வந்த யானைகள் கன்னியாகுமரி மாவட்டம் தெள்ளாந்தி, திடல், தடிக்காரன்கோணம் பகுதி விளைநிலங்களைச் சேதப்படுத்தி வந்தன. யானைகள் ஊருக்குள் புகாமல் இருப்பதைத் தடுக்கும் வகையில் வனத்துறை ஏற்பாட்டில் தெள்ளாந்தி உடையார்கோணம் பகுதியில் அகழி வெட்டப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வந்தது.

அதன் பின்னரும் விவசாய நிலங்களில் புகுந்த யானைகளைக் காடுகளுக்கு விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். இதில் தடிக்காரன்கோணம் வனப்பகுதியில் பெண் யானை ஒன்று உடல்நலம் பாதிக்கப்பட்டு நடக்க முடியாததால் மீண்டும் வனத்திற்குள் செல்ல முடியாமல் நின்றது. இதுகுறித்துக் குமரி வனத்துறையினர், திருநெல்வேலி வன அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து திருநெல்வேலியில் இருந்து 30 பேர் அடங்கிய கால்நடை மருத்துவக் குழுவினர் தடிக்காரன்கோணம் வனப்பகுதிக்கு வந்திருந்தனர். அங்கு உடல்நலம் பாதிக்கப்பட்ட பெண் யானைக்கு மயக்க ஊசி செலுத்தி சோதனை செய்தனர். அப்போது யானைக்கு உடலில் காயம் இருந்ததுடன், உடலில் தொற்று ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் மருத்துவக் குழுவினர் அங்கேயே தங்கி யானைக்கு மூன்று நாட்களாக சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் சிகிச்சைப் பலனின்றி நேற்று அந்த யானை உயிரிழந்தது.

அப்போது, மருத்துவர்கள் யானையை மீண்டும் சோதனை செய்தபோது 50 வயதைக் கடந்த அந்த யானையின் வாயில் புண் இருந்ததால் உணவு சாப்பிட முடியாமல் சிரமத்தில் இருந்துள்ளது. உடல் மெலிந்து சோர்வடைந்த யானை, சிகிச்சைக்குப் பின்னர் மரணமடைந்திருப்பது தெரியவந்தது. இந்நிலையில் தடிக்காரன்கோணம் வனப்பகுதியில் பெண் யானை இறந்ததன் உண்மை நிலையை அறிய தேனி, முதுமலை, ஓசூர் வனச்சரகப் பகுதிகளில் இருந்து மருத்துவக் குழுவினர் யானை இறந்த பகுதிக்கு வந்தனர்.

அவர்கள் யானையை பிரேதப் பரிசோதனை செய்ததுடன், உடற்கூறு ஆய்வு செய்வதற்குத் தேவையான உடற்பகுதிகளைச் சேகரித்தனர். யானை தடிக்காரன்கோணம் வனப்பகுதியிலேயே அடக்கம் செய்யப்பட்டது. பின்னர் சேகரிக்கப்பட்ட உடற்கூறுகள் பரிசோதனைக்காக முதுமலைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x