Last Updated : 23 Jun, 2021 05:09 PM

 

Published : 23 Jun 2021 05:09 PM
Last Updated : 23 Jun 2021 05:09 PM

காரைக்கால் மாவட்ட எல்லைக்கு வந்தது காவிரி நீர்: பாசனத்துக்காகத் தண்ணீர் திறப்பு

காரைக்கால் மாவட்டம் நல்லம்பல் நூலாறு ரெகுலேட்டரில் காவிரி நீரை மலர் தூவி வரவேற்ற சட்டப்பேரவை உறுப்பினர் பி.ஆர்.சிவா, மாவட்ட ஆட்சியர் அர்ஜுன் சர்மா உள்ளிட்டோர்.

காரைக்கால் மாவட்ட எல்லைப் பகுதிக்கு காவிரி நீர் வந்தடைந்தது.

ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்ட நிலையில், காவிரி டெல்டா பகுதிகள் பாசனத்துக்காக ஜூன் 16-ம் தேதி கல்லணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இந்நிலையில் காவிரி கடைமடைப் பகுதியான காரைக்கால் மாவட்ட எல்லைப் பகுதிக்கு நேற்று (ஜூன் 22) காவிரி நீர் வந்து சேர்ந்தது. இதையடுத்து காரைக்கால் மாவட்டம் நல்லம்பல் நூலாறு ரெகுலேட்டரில் இன்று (ஜூன் 23) காலை காவிரி நீரை வரவேற்கும் நிகழ்வும், ரெகுலேட்டரிலிருந்து காரைக்கால் மாவட்டப் பாசனத்துக்காகத் தண்ணீர் திறந்துவிடும் நிகழ்வும் நடைபெற்றது.

இதில் திருநள்ளாறு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் பி.ஆர்.சிவா, மாவட்ட ஆட்சியர் அர்ஜுன் சர்மா, துணை ஆட்சியர் எம்.ஆதர்ஷ் ஆகியோர் பங்கேற்று விதை நெல்கள், மலர்கள் தூவி காவிரி நீரை வரவேற்று, பாசனத்துக்காக ரெகுலேட்டரிலிருந்து தண்ணீரைத் திறந்து வைத்தனர்.

பின்னர் பி.ஆர்.சிவா எம்எல்ஏ செய்தியாளர்களிடம் கூறுகையில், “மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் நீரை நம்பியே இப்பகுதி விவசாயம் உள்ளது. வாய்க்கால்கள் தூர்வரும் பணி பெரும்பாலும் முடிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு விவசாயம் சிறப்பாக இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. நல்லம்பல் ஏரியைச் சுற்றுலாத் தலமாக்கவும், புதிதாக ஏரிகள் வெட்டவும் நடவடிக்கை எடுக்கப்படும். நிகழாண்டு விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைக்கவும், அரசே நெல் கொள்முதல் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

மாவட்ட ஆட்சியர் அர்ஜுன் சர்மா கூறுகையில், ''மாவட்டத்தில் வாய்க்கால்கள் தூர்வாரும் பணி முடியும் தறுவாயில் உள்ளது. 2019-20ஆம் ஆண்டுக்கான பயிர்க் காப்பீட்டு இழப்பீட்டுத் தொகை ஜூலை முதல் வாரத்தில் விவசாயிகளுக்கு கிடைக்கும். 2020-21ஆம் ஆண்டுக்கான பயிர்க் காப்பீட்டு இழப்பீட்டுத் தொகை விரைவில் கிடைக்கும் வகையில் முயற்சிகள் மேற்கொள்ளப்படும். அடுத்தகட்டமாக தண்ணீரைச் சேமிக்கும் வகையில் குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படும்'' என்றார்.

இந்நிகழ்வில் பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் ஏ.ராஜசேகரன், செயற்பொறியாளர்கள் கே.வீரசெல்வம், கே.சந்திரசேகர், வேளாண் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள், விவசாயிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x