

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் தனி அதிகாரிகளின் பதவிக் காலம் ஜூன் 30ஆம் தேதியுடன் முடியவுள்ள நிலையில், மேலும் 6 மாதம் நீட்டிக்கும் மசோதா சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.
தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் 2016ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நடத்துவதாக இருந்தது. ஆனால், தொகுதிகளை மறுசீரமைக்கவில்லை என்று வழக்கு உயர் நீதிமன்றத்தில் இருந்ததால் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. தொடர்ந்து வழக்கு நடந்து வந்த நிலையில் அரசுக்கு உயர் நீதிமன்றம் பல எச்சரிக்கைகளை விட்டது. இறுதியாக புதிய மாவட்டங்களைக் காரணம் காட்டியது அரசு.
புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களைத் தவிர 27 மாவட்டங்களில் தேர்தல் நடத்த உத்தரவிட்டதன் அடிப்படையில் 2019ஆம் ஆண்டு ஊரக அளவில் மட்டும் தேர்தல் நடத்தப்பட்டது. ஆனால், நகராட்சி, பேரூராட்சி தேர்தல்கள் நடத்தப்படவில்லை. இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தேர்தல் நடத்தப்படாமல் அங்கு அரசு தனி அதிகாரிகளே நிர்வாகத்தை கவனிக்க அரசாணை போடப்பட்டு ஒவ்வொரு ஆறு மாதத்திற்கும் ஒருமுறை நீட்டிப்பு செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் புதிய ஆட்சி பொறுப்பேற்ற நிலையில் தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி உள்ளாட்சித் தேர்தலை முழுமையாக நடத்த நடவடிக்கை எடுத்து வருகிறது. உள்ளாட்சித் துறையில் செயல்படும் தனி அதிகாரிகளின் பதவிக் காலம் ஜூன் 30ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், உள்ளாட்சித் தேர்தல் குறித்தும், புதிதாக உருவான 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது குறித்து உள்ளாட்சித் துறை மற்றும் நகராட்சித் துறை அமைச்சர்களுடன் முதல்வர் ஸ்டாலின் நேற்று ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாத 9 மாவட்டங்களில் செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்த உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் தனி அலுவலர் பதவிக் காலம் ஜூன் 30ஆம் தேதியுடன் முடியவுள்ள நிலையில், மேலும் 6 மாதம் நீட்டிக்கும் மசோதா சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. அமைச்சர்கள் கே.என்.நேரு, கே.ஆர். பெரியகருப்பன் ஆகியோர் சட்ட மசோதாக்களைப் பேரவையில் தாக்கல் செய்தனர்.
புதிதாக உருவான 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த கூடுதல் அவகாசம் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருப்பதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. கரோனா பரவலைக் கருத்தில் கொண்டு தேர்தல் தேதி முடிவு செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.