

தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் பிறந்து 14 நாட்களே ஆன பெண் குழந்தையின் கட்டை விரல் துண்டிக்கப்பட்டதால், பெற்றோருக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.75 ஆயிரம் வழங்கத் தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தஞ்சாவூரைச் சேர்ந்த கணேசன், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:
''என் மனைவிக்குத் தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் மே 25-ம் தேதி அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தை பிறந்தது. மருத்துவமனையில் குழந்தையின் இடது கையில் மருந்து ஏற்றுவதற்கு ஊசி பொருத்தப்பட்டிருந்தது. ஜூன் 7 அன்று குழந்தை கையில் இருந்த ஊசியை எடுத்தபோது குழந்தையின் இடது கை கட்டை விரல் துண்டிக்கப்பட்டது.
பின்னர் கட்டை விரலை அறுவை சிகிச்சை மூலம் ஒட்டவைக்க மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். இருப்பினும் கட்டை விரலைச் சேர்க்க முடியவில்லை. அதன் பிறகு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்து விரலைச் சேர்க்க மருத்துவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் செவிலியர்கள் கவனக்குறைவாகப் பணிபுரிகின்றனர்.
எனவே, கவனக்குறைவாகச் செயல்பட்ட செவிலியர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும், உரிய இழப்பீடு வழங்கவும், தனியார் மருத்துவமனையில் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மூலம் என் குழந்தையின் கட்டை விரலைப் பொருத்த நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்''.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்தார். அவர் கூறும்போது, ''மனுதாரருக்கு இடைக்கால நிவாரணமாக 4 வாரத்தில் ரூ.75 ஆயிரம் வழங்க வேண்டும். அறுவை சிகிச்சை மூலம் குழந்தையின் கையில் கட்டை விரலை மீண்டும் பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மனு தொடர்பாகச் சுகாதாரத் துறைச் செயலர், தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி முதல்வர் ஆகியோர் பதிலளிக்க வேண்டும்'' என உத்தரவிட்டு விசாரணையை ஜூலை 26-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.