நெல்லை சிமென்ட் ஆலையில் 2 பைப் வெடிகுண்டுகள் கண்டெடுப்பு: 6 பேரிடம் போலீஸார் விசாரணை

நெல்லை சிமென்ட் ஆலையில் 2 பைப் வெடிகுண்டுகள் கண்டெடுப்பு: 6 பேரிடம் போலீஸார் விசாரணை
Updated on
1 min read

திருநெல்வேலி அருகே சங்கர் நகர், சங்கர் சிமென்ட் ஆலை வளாகத்தில் இரண்டு பைப் வெடிகுண்டுகளை போலீஸார் கண்டெடுத்து, செயலிழக்கச் செய்தனர். சிமென்ட் ஆலை நிர்வாகத்திடம் பணம் கேட்டு மிரட்டி இந்த வெடிகுண்டுகள் வைக்கப்பட்டதாகத் தெரிகிறது. இது தொடர்பாக 6 பேரிடம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

திருநெல்வேலி தாழையூத்து, சங்கர் நகரில் இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதில் 100-க்கும் மேற்பட்ட நிரந்தரத் தொழிலாளர்களும், ஆயிரக்கணக்கான ஒப்பந்த அடிப்படையிலான தொழிலாளர்களும் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாகக் குறைவான எண்ணிக்கையில் தொழிலாளர்களை வைத்து உற்பத்தி செய்து வருகின்றனர். மேலும் இந்தியா சிமென்ட்ஸ் நிர்வாகத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் பலரை ஆலை நிர்வாகம், பணி நீக்கம் செய்ததாகவும் கூறப்படுகிறது. பலரை வாரத்திற்குச் சில நாட்கள் மட்டுமே பணிக்கு வருமாறும் ஆலை நிர்வாகம் கூறியதாகத் தெரிகிறது.

கடந்த சனிக்கிழமை மற்றும் திங்கள்கிழமை சில மர்ம நபர்கள் இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தின் வளாகத்தில் 5 இடங்களில் பைப் வெடிகுண்டுகளை வைத்துவிட்டுச் சென்றதாகத் தொலைபேசியில் மிரட்டல் விடுத்தனர். மேலும், தங்களுக்கு 50 லட்சம் ரூபாய் தரவேண்டும் என வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து ஆலை நிர்வாகம் காவல்துறைக்குத் தகவல் அளித்தது. அதன்படி தாழையூத்து காவல்துறையினர் மற்றும் மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் மணிவண்ணன் தலைமையிலான அதிகாரிகள் குழு விசாரணை மேற்கொண்டனர்.

இதில் 2 பைப் வெடிகுண்டுகள் தொழிற்சாலையின் உற்பத்திப் பிரிவில் உள்ள லிப்ட் கட்டுப்பாட்டு அறையில் கண்டெடுக்கப்பட்டன. கைப்பற்றப்பட்ட வெடிகுண்டுகளை வெடிகுண்டு தடுப்புப் பிாிவு போலீஸார் பரிசோதனை செய்தனர். அதன்பின் வெடிகுண்டுகளை சுண்ணாம்பு குவாரியில் வைத்து வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீஸார், மாவட்ட எஸ்.பி. மணிவண்ணன் முன்னிலையில் செயலிழக்க வைத்தனர்.

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட எஸ்.பி. மணிவண்ணன், பைப் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ள வெடிமருந்துப் பொருட்கள் அணுகுண்டு பட்டாசில் பயன்படுத்தும் வெடிமருந்து என்றும், அதனை முழுமையாகச் செயலிழக்கச் செய்துவிட்டதாகவும், வழக்கு விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறினார். இது தொடர்பாகத் தாழையூத்து போலீஸார் 6 பேரைப் பிடித்து விசாரித்து வருகிறார்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in