அவிநாசி முன்னாள் எம்எல்ஏ மனைவி மீது தாக்குதல்: திருப்பூர் எஸ்பியிடம் புகார்

அவிநாசி முன்னாள் எம்எல்ஏ மனைவி மீது தாக்குதல்: திருப்பூர் எஸ்பியிடம் புகார்
Updated on
1 min read

அவிநாசி தொகுதி முன்னாள் எம்எல்ஏவின் மனைவி மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக, திருப்பூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளனர்.

அவிநாசி தொகுதி சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் ஏ.ஏ.கருப்பசாமி தனது மனைவி விஜயாவுடன் வந்து, திருப்பூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சசாங் சாயிடம் இன்று புகார் மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

’’அவிநாசி வட்டம் ஆலத்தூர் சத்யா நகரில் வசிக்கும் நபர் ஒருவர், கடந்த 30-ம் தேதி எங்களுடைய விவசாய பூமியில் உள்ள நிலக்கடலை பயிர்கள் மற்றும் செடிகளை வெள்ளாடுகளை விட்டு மேய்த்துக் கொண்டிருந்தார்.

இதுகுறித்து அந்த நபரிடம் எனது மனைவி விஜயா கேட்டதற்கு, அவர் என் மனைவி மீது தாக்குதல் நடத்தியுள்ளார். இந்த நிலையில் அந்த நபர், தன் மேல் உள்ள தவற்றை மறைக்க எங்களுக்கு முன்பாக, சேவூர் போலீஸாரிடம் புகாரளித்து விட்டார்.

இந்த நிலையில் எங்களது தரப்பில் மனைவி விஜயா புகார் அளித்திருந்தார். சேவூர் போலீஸார் புகாரைப் பெற்றுக்கொண்டு மனு ரசீது அளித்திருந்தனர். இதை அறிந்த நபர், என்னிடம் கடந்த 16-ம் தேதி, மனைவியிடம் சண்டையிடும் நோக்கத்தில் அநாகரிகமான முறையில் நடந்து கொண்டார். இதுதொடர்பாகக் கடந்த 17-ம் தேதி மீண்டும் சேவூர் போலீஸாரிடம் புகார் அளித்திருந்தோம்.

அதேபோல் 18-ம் தேதி இணைய வாயிலாகவும் புகார் அளித்திருந்தோம். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அவிநாசி குற்றவியல் நீதித்துறை நடுவருக்கும் 19-ம் தேதி பதிவுத் தபாலில் புகார் அளித்திருந்தோம். ஆனால் போலீஸார் எங்கள் மனு மீது நடவடிக்கை எடுக்க மறுக்கின்றனர்.

இதனால், தற்போது மாவட்டக் காவல் காணிப்பாளரிடம் மீண்டும் புகாரளிக்க வந்துள்ளோம். சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்காமல், காவல்துறையினர் அநீதிக்குத் துணை போயிருப்பதால், எங்களது குடும்பம் பாதிக்கப்பட்டுள்ளது. ஆகவே எங்களுக்கு புகார் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’.

இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in