Published : 23 Jun 2021 12:41 PM
Last Updated : 23 Jun 2021 12:41 PM

சென்னையில் கோவாக்சின் தடுப்பூசி இரண்டாம் தவணை சிறப்பு முகாம் தொடங்கியது

பிரதிநிதித்துவப் படம்.

சென்னை

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கோவாக்சின் தடுப்பூசி இரண்டாம் தவணை செலுத்திக்கொள்ள இன்று முதல் இரண்டு நாட்களுக்குச் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில், "சென்னையில் இதுநாள்வரை 17,58,187 முதல் தவணை தடுப்பூசியும், 6,04,804 இரண்டாம் தவணை தடுப்பூசியும் என, மொத்தம் 23,62,991 கோவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களின் தரவுகளை ஆய்வு செய்ததில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தவேண்டிய காலத்தைக் கடந்து சுமார் 89,500 நபர்கள் இருப்பது தெரியவந்துள்ளது.

மாநகராட்சியின் சார்பில் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தத் தவறிய நபர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு, மண்டல அலுவலகங்களில் இருந்து தொலைபேசி வாயிலாகத் தகவல் தெரிவிக்கப்பட்டு உடனடியாக இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.

அதன்படி, தொலைபேசி வாயிலாகத் தகவல் தெரிவிக்கப்பட்டவர்களில் இதுவரை 30,480 நபர்கள் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். மேலும், தற்போதைய நிலவரப்படி சுமார் 59,000 நபர்கள் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தவேண்டிய காலத்தைக் கடந்து தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமல் உள்ளனர்.

இவர்களில், கோவாக்சின் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத நபர்களுக்கு 23.06.2021 மற்றும் 24.06.2021 ஆகிய இரு நாட்களுக்கு மாநகராட்சியின் அனைத்துத் தடுப்பூசி மையங்களிலும் கோவாக்சின் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ள சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த இரண்டு நாள் கோவிட் தடுப்பூசி செலுத்தும் சிறப்பு ஏற்பாட்டுக்காக 62,050 கோவாக்சின் தடுப்பூசிகள் அனைத்துத் தடுப்பூசி முகாம்களுக்கும் பிரித்து அனுப்பி வைக்கப்பட்டது. பொதுமக்கள் தடுப்பூசி முகாம்கள் குறித்த தகவல்களை http://covid19.chennaicorporation.gov.in/covid/vaccine_centers/ என்ற இணையதள இணைப்பின் வாயிலாகத் தெரிந்துகொள்ளலாம்" எனத் தெரிவிக்கப்படுள்ளது.

அதன்படி, இன்று (ஜூன் 23) கோவாக்சின் தடுப்பூசி செலுத்துவதற்கான சிறப்பு முகாம்கள் சென்னை முழுவதிலும் காலை முதல் நடைபெற்று வருகின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x