

ஏடிஎம் இயந்திரத்தில் நூதன முறையில் ரூ.50 லட்சம் வரை திருடிய வழக்கில் குற்றவாளிகளை போலீஸார் தேடி வரும் நிலையில், இந்த வழக்கு மத்திய குற்றப்பிரிவில் உள்ள வங்கி மோசடி தடுப்புப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ஹரியாணாவில் 3 பேர் பிடிபட்டுள்ளனர்.
சென்னையில் உள்ள ஏடிஎம் மையங்களில் வாடிக்கையாளர்களை ஏமாற்றி ஏடிஎம் பணம் திருடப்படுவது வழக்கமான செய்தி. அதேபோன்று ஏடிஎம் இயந்திரத்தை உடைத்துத் திருடுவது, திருடப்பட்ட ஏடிஎம் கார்டு, போலியாகத் தயாரிக்கப்பட்ட ஏடிஎம் கார்டு மூலம் பணம் திருடுவது வாடிக்கையான ஒன்று. இதில் சம்பந்தப்பட்ட ஏடிஎம் மற்றும் பணம் எடுக்கும் நேரத்தை வைத்துக் குற்றவாளிகளை போலீஸார் பிடித்துக் கைது செய்வது வழக்கம்.
ஆனால், தற்போது எஸ்பிஐ ஏடிஎம் மையத்தில் நூதன முறையில் பணம் திருடப்பட்டதை அறிந்த வங்கி அதிகாரிகள் அதிர்ந்து போயினர். பொதுவாக ஏடிஎம் எந்திரத்தில் பணம் எடுக்கும்போது பணம் வெளியில் வரும். அதை 15 நொடிகளில் எடுக்காவிட்டால் பணம் மீண்டும் எந்திரத்திற்குள் சென்றுவிடும். பணம் மீண்டும் சம்பந்தப்பட்டவர் வங்கிக் கணக்கிற்கே சென்றுவிடும்.
இதைப் பயன்படுத்தி பணத்தை எடுப்பதுபோல் எடுத்துப் பணத்தை வெளியில் எடுக்காமல் எந்திரத்துக்குள்ளும் செல்லாமல் பிடித்துக்கொண்டு பின்னர் எந்திரம் அதன் செயலை நிறுத்தியவுடன் பணத்தை எடுத்துள்ளனர். இதன் மூலம் எந்திரம் பணத்தை வாடிக்கையாளர் எடுக்கவில்லை எனத் தகவல் அனுப்பி பணத்தை மீண்டும் வாடிக்கையாளர் கணக்கிற்கே திருப்பிவிடும். ஆனால், இவர்கள் பணத்தைக் கையில் பிடித்திருந்ததால் பணத்தை எடுத்துக்கொள்வார்கள்.
இது வங்கி அதிகாரிகளுக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தாது. பணம் குறைந்தால் பணத்தை டெபாசிட் செய்பவர் சிக்குவார். ஆனால், பணம் ஒரே நேரத்தில் மொத்தமாக எடுக்கப்பட்டும், பணம் எடுக்கப்படவில்லை என்று வங்கியின் சர்வருக்கு எந்திரம் தகவல் அனுப்பிவிடும். இந்த மோசடி மூலம் எவ்வளவு பணம் எடுத்தாலும், சம்பந்தப்பட்ட நபரின் வங்கிக் கணக்கில் பணம் இருந்துகொண்டே இருக்கும். ஆனால் ஏடிஎம் இயந்திரத்தில் இருக்கும் பணம் காலியாகிக் கொண்டே இருக்கும்.
இவ்வாறு தொடர்ச்சியாக பல்வேறு ஏடிஎம் இயந்திரங்களில் இருந்து இந்த கும்பல் பல லட்சம் ரூபாயைத் திருடியுள்ளது. இதுகுறித்து வங்கி அதிகாரிகள் காவல்துறையில் புகார் அளித்தனர். இவ்வாறு பணத்தை எடுப்பவர்களுக்கு ஏடிஎம் அட்டை இருக்கவேண்டும். அதுகுறித்து விசாரித்தபோது அவர்கள் போலிப் பெயரில் வங்கிக் கணக்கு ஆரம்பித்துள்ளதும் தெரியவந்தது.
சமீபத்தில் கேஷ் டெபாசிட் செய்யும் வசதியுடன் கூடிய குறிப்பிட்ட நிறுவனத்தின் ஏடிஎம் எந்திரம் உள்ள எஸ்பிஐ மையங்களில் தொடர்ந்து லட்சக்கணக்கில் பணம் குறைந்தது கண்டுபிடிக்கப்பட்டது. முதன்முதலில் கடந்த 18ஆம் தேதி ராமாபுரம் ஏடிஎம் மையத்தில் ஒரே எந்திரத்தில் 10 ஆயிரம் வீதம் 15 முறை எடுக்கப்பட்டு 1.5 லட்சம் ரூபாய் எடுத்திருப்பது கண்டறியப்பட்டது.
அதேபோல் விருகம்பாக்கம், சின்மயா நகர், தரமணி, வேளச்சேரி விஜயா நகர், பாண்டிபஜார், வடபழனி 100 அடி சாலை ஏடிஎம் மையம் என சென்னை முழுவதும் ரூ.44 லட்சம் வரை பணம் நூதன முறையில் திருடப்பட்டது தெரியவந்தது. அந்தந்த காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்து சென்னை காவல் ஆணையரே நேரில் விசாரணையில் ஈடுபட்டார்.
இந்நிலையில் வங்கியின் மும்பை சைபர் பிரிவு அதிகாரிகள் இந்த வழக்கில் சிலரை அடையாளம் கண்டுள்ளனர். அவர்கள் ராஜஸ்தான், ஹரியாணா எல்லையில் பிடிபட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. வழக்கில் முக்கியக் குற்றவாளியான ஒருவரைப் பிடித்துள்ளதாகவும், அவருடன் தொடர்புடைய மேலும் 2 பேர் சிக்கியதாகவும் கூறப்படுகிறது. அவர்களைக் கைது செய்து அழைத்துவர சென்னை தி.நகர் துணை ஆணையர் ஹரியாணா விரைந்துள்ளார்.
இதுவரை சென்னையில் 16 புகார்கள் வந்துள்ளன. அதில் முறையான ஆவணங்களைக் கொடுத்த 7 புகார்களில் வழக்குப் பதிவு செய்து மத்திய குற்றப்பிரிவு வங்கி மோசடி தடுப்புப் பிரிவுக்கு மாற்றம் செய்து காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். மீதமுள்ள புகார்களுக்கு ஆவணங்களைச் சரிபார்த்து வழக்குப் பதிவு செய்தபின் மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது