

தேர்தலில் வென்று 50 நாட்களுக்குப் பிறகு அமைச்சர்கள் பட்டியலை துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனிடம் முதல்வர் ரங்கசாமி இன்று காலை வழங்கினார்.
புதுவையில் முதல்வர் ரங்கசாமி தலைமையில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. தேர்தலில் வென்று 50 நாட்களை கடந்த நிலையிலும் முதல்வர் ரங்கசாமியும், பேரவைத்தலைவராக செல்வமும் மட்டுமே பதவியேற்றுள்ளனர். இதுவரை அமைச்சர்கள் யாரும் பதவியேற்கவில்லை. என்.ஆர்.காங்கிரசிலும், பாஜகவிலும் அமைச்சர்களை பிரிப்பதில் மோதல் ஏற்பட்டதால் காலதாமதம் ஏற்பட்டது.
அதைத்தொடர்ந்து, சமரசம் ஏற்பட்டதால் என்.ஆர்.காங்கிரசுக்கு 3 அமைச்சர்கள், துணை சபாநாயகர் பதவிகள் ஒதுக்கப்பட்டன. பாஜகவுக்கு சபாநாயகர், 2 அமைச்சர்கள் என முடிவானது. ஆனால், பாஜக தரப்பில் அமைச்சர்கள் பட்டியலில் திடீர் மாற்றம் செய்தனர். பாஜக பட்டியலில் இடம்பெற்றிருந்த ஜான்குமார் மாற்றப்பட்டு, தனி தொகுதி எம்எல்ஏ சாய்சரவணக்குமார் அமைச்சர்கள் பட்டியலில் இடம்பெற்றார்.
இதனாலும், என்.ஆர்.காங்கிரசில் அமைச்சர்கள் பட்டியலை இறுதி செய்யாததாலும் அமைச்சர்கள் பதவியேற்பு தள்ளிப்போனது. என்.ஆர்.காங்கிரசில் உள்ள எம்எல்ஏக்களும் அமைச்சர் பதவியை பெற முயற்சித்தனர். இதனால், ரங்கசாமி வழக்கம் போல் மவுனமாகவே இருக்கத்தொடங்கினார்.
தேர்தலில் வென்று 50 நாட்களை கடந்த பின்னரும், அமைச்சர்கள் பட்டியலை துணைநிலை ஆளுநர் தமிழிசையிடம் ரங்கசாமி தராமல் இருந்ததால் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக எம்எல்ஏக்கள் தரப்பிலும், மக்கள் மத்தியிலும் அதிருப்தி ஏற்பட்டது.
இந்நிலையில், இன்று (ஜூன் 23) காலை ராஜ்நிவாஸுக்கு முதல்வர் ரங்கசாமி சென்றார். அவர் துணைநிலை ஆளுநர் தமிழிசையை சந்தித்தார். அப்போது, என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக அமைச்சர்கள் கொண்ட பட்டியலை வழங்கி உள்ளார்.
இதையடுத்து, இப்பட்டியலை துணைநிலை ஆளுநர் தமிழிசை, உள்துறை அனுமதிக்கு அனுப்பி ஒப்புதல் பெறுவார். அதையடுத்து, பவுர்ணமியான நாளையோ, வரும் 27-ம் தேதியோ அமைச்சர்கள் பதவியேற்பு விழா நடைபெற வாய்ப்பு உள்ளது. ஆளுநர் மாளிகையில் இருந்து வெளியே வந்த முதல்வர் ரங்கசாமியிடம் கேட்டதற்கு, எப்பதிலும் வழக்கம் போல் தெரிவிக்கவில்லை.