ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து விநாடிக்கு 5,000 கனஅடியாக அதிகரிப்பு

நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக ஒகேனக்கல் ஐவர் பாணி அருவி பகுதியில் சீறிப்பாயும் தண்ணீர்.
நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக ஒகேனக்கல் ஐவர் பாணி அருவி பகுதியில் சீறிப்பாயும் தண்ணீர்.
Updated on
1 min read

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து விநாடிக்கு 5,000 கனஅடியாக அதிகரித்துள்ளது.

ஒகேனக்கல் காவிரியாற்றில் நேற்று காலை அளவீட்டு நிலவரப்படி விநாடிக்கு 1,500 கனஅடியாக இருந்த நீர்வரத்து பின்னர் 5,000 கனஅடியாக அதிகரித்தது.

தென்மேற்கு பருவமழை தொடங்கி தீவிரமடைந்து வருகிறது. இதன்காரணமாக கர்நாடகா, கேரளா மாநிலங்களின் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. கர்நாடகாவில் காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான தலக்காவிரி, பாகமண்டலா, மடிக்கேரி உள்ளிட்ட இடங்களில் கடந்த சிலதினங்களாக கனமழை பெய்துவருகிறது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதேபோல கேரளாவின் வயநாடு மலைப்பகுதிகளில் பெய்துவரும் கனமழையால் கபிலா ஆற்றிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

தொடர் மழை காரணமாக காவிரி, கபிலா ஆறுகளின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கிருஷ்ணராஜ சாகர், கபினி ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

நேற்றைய நிலவரப்படி 2 அணைகளில் இருந்தும் விநாடிக்கு சுமார் 10 ஆயிரம் கனஅடி அளவுக்கு தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. இந்நிலையில், சில நாட்கள் முன்னதாக திறக்கப்பட்ட தண்ணீர்நேற்று தருமபுரி மாவட்டம்ஒகேனக்கலை வந்தடைந்தது. நேற்று பகலில், காவிரியாற்றின் தமிழக எல்லையான பிலிகுண்டுலு பகுதி அளவீட்டின்படி விநாடிக்கு 5,000 கனஅடியாக நீர்வரத்து அதிகரித்தது.

இந்த நீர்வரத்து காரணமாக ஒகேனக்கல் பிரதான அருவி, ஐவர் பாணி அருவி,சினி பால்ஸ் அருவி உள்ளிட்டபகுதிகளில் நீரின் அளவும், வேகமும் அதிகரித்துள்ளது. ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து அதிகரித்துவரும் நிலையில் மாவட்ட நிர்வாகம் பிறப்பித்த உத்தரவின்பேரில் காவிரிஆற்றோரபகுதியை வருவாய், வனம் உள்ளிட்ட அரசுத் துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

இதனிடையே இன்று நீர்வரத்துமேலும் அதிகரித்து விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடியை தொடும் என பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். புது நீர்வரத்தின்போது வழக்கமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளித்து மகிழும் சுற்றுலா பயணிகளுக்கு நடப்பு ஆண்டில் கரோனா காரணமாக அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

நீர்வரத்து அதிகரிப்பு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 686 கனஅடியாக உயர்ந்துள்ளது.

மேட்டூர் அணையில் இருந்துகடந்த 12-ம் தேதி முதல் டெல்டா பாசனத்துக்காக விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு605 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று 686 கனஅடியாக உயர்ந்தது.

நேற்று முன்தினம் 90.68 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் நேற்று 89.96 அடியானது. நீர் இருப்பு 52.60 டிஎம்சி-யாக உள்ளது. இதனிடையே, கர்நாடக மாநில அணைகளில் இருந்து காவிரியில் திறந்துவிடப்பட்ட நீர்,மேட்டூர் வந்தடையும் என்பதால்வரும் நாட்களில் நீர்வரத்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in