கரோனா 3-வது அலையை எதிர்கொள்ள குழந்தைகளுக்கு 1 லட்சம் படுக்கைகள் தேவைப்படும்: சி.விஜயபாஸ்கர் கோரிக்கை

கரோனா 3-வது அலையை எதிர்கொள்ள குழந்தைகளுக்கு 1 லட்சம் படுக்கைகள் தேவைப்படும்: சி.விஜயபாஸ்கர் கோரிக்கை
Updated on
1 min read

கரோனா 3-வது அலையை எதிர்கொள்ள தமிழகத்தில் குழந்தைகளுக்காக 1 லட்சம் படுக்கைகளை ஏற்படுத்த வேண்டும் என்று அதிமுக உறுப்பினர் சி.விஜயபாஸ்கர் கோரிக்கை விடுத்துள்ளார்.

சட்டப்பேரவையில் அவர் நேற்று பேசியதாவது:

சீனாவில் 2019 டிசம்பரில் கரோனா தொற்று கண்டறியப்பட்ட செய்தி வெளியானது முதல் அதிமுக அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியது. போர்க்கால அடிப்படையில் வலுவான சுகாதாரக் கட்டமைப்பை உருவாக்கினோம். அடுத்து 3-வது அலை வரும் என்று மருத்துவ நிபுணர்கள் கணித்துள்ளனர். அதை எதிர்கொள்ள மருத்துவக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும்.

தமிழகத்தில் 18 வயதுக்கு கீழ் சுமார் 2 கோடி பேர் உள்ளனர். அவர்களுக்கு தடுப்பூசி போடப்படவில்லை. 3-வது அலையில் 10 சதவீதம் பேர் பாதிக்கப்பட்டால்கூட 20 லட்சம்பேருக்கு தொற்று ஏற்படும். அதில் 10 சதவீதம் பேரை மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டிய நிலை ஏற்பட்டால் சுமார் 2 லட்சம் குழந்தைகளை அனுமதிக்க வேண்டியிருக்கும். எனவே, தமிழக அரசு குழந்தைகளுக்காக 1 லட்சம் படுக்கைகளை ஏற்படுத்த வேண்டும்.

18 வயதுக்கு கீழ் உள்ளகுழந்தைகளின் தாய்மார்களுக்கு கட்டாயம் தடுப்பூசி போட வேண்டும். அப்போது 3-வது அலையில் குழந்தைகள் பாதிக்கப்பட்டால், தாய்மார்களை தொற்றில் இருந்து காக்க முடியும்.

இந்த ஆண்டு நீட் தேர்வு நடக்குமா, நடக்காதா என்பதைஅரசு தெளிவுபடுத்த வேண்டும்.

இவ்வாறு சி.விஜயபாஸ்கர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in