Published : 23 Jun 2021 03:12 AM
Last Updated : 23 Jun 2021 03:12 AM

காற்று மாசுபாடு காரணமாக மூச்சுத்திணறும் மக்கள்: தனியார் இரும்பாலை மீது மாசுக்கட்டுப்பாட்டு அதிகாரியிடம் புகார்

திருப்பூர்

தனியார் இரும்பாலையில் இருந்து அளவுக்கு அதிகமாக கரும்புகை வெளியேறுவதால் ஏற்படும் காற்று மாசு காரணமாக மூச்சுத் திணறல் ஏற்படுவதாக அவிநாசி அருகே உள்ள கானூர் கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக கானூர் கிராம மக்கள் கூறியதாவது: அவிநாசி வட்டம்கானூர் ஊராட்சியில் பெரிய கானூர், சின்ன கானூர் மற்றும் கானூர் புதூர் ஆகிய கிராமங்கள் உள்ளன. கானூர் ஊராட்சியில் 1,100 குடும்பங்களில் 2,500 வாக்காளர்கள் உள்ளனர்.

பெரிய கானூரில் செயல்பட்டு வரும் தனியார் முறுக்குகம்பி தயாரிக்கும் தொழிற்சாலையால், கானூர் கிராமத்தில் சமீப நாட்களாக காற்று மாசு அதிகரித்துள்ளது.

ஆலையில் இருந்து அதிக அளவில் கரும்புகை வெளியேறுவதால், பலருக்கும் மூச்சுத் திணறல் ஏற்படுகிறது. கிராமத்தில் வாழும் குழந்தைகள், கர்ப்பிணிகள் மற்றும் முதியவர்கள் என பலரும் பாதிக்கப்படுகிறார்கள். தொடர்ந்து மாசு படிந்த காற்றை சுவாசிக்கும்போது ஆஸ்துமா உள்ளிட்ட சுவாச நோய்களை சந்திக்க கூடிய அபாயமும் ஏற்பட்டுள்ளது.

இரும்பாலை 10 ஆண்டுகளாக செயல்பட்டாலும் சமீப காலமாக அதிகளவில் புகை வெளியேறி, அருகில் உள்ள வாழை, மரவள்ளி, மஞ்சள், பருத்தி, தென்னை உள்ளிட்ட பயிர்களின் மீது கரும்புகை படிகிறது. சுற்றுவட்டார பகுதியில் உள்ள கிராமங்களுக்கு பெரும் நீராதாரமாக திகழும், அத்திக்கடவு-அவிநாசி திட்டத்துக்கு முக்கிய அங்கம் வகிக்கும் கானூர் குளமும் மாசடைகிறது. இரும்பாலையால் காற்று, நீர் நிலை, கால்நடைகள் மற்றும் விவசாய உற்பத்தி என சகல தரப்பிலும் பாதிக்கப்பட்டுள்ளோம்.

கேரளா உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து பழைய இரும்பை வாங்கி வந்து, இங்கு உருக்கு கம்பிதயார் செய்கிறார்கள். பழைய இரும்பு பொருட்களை ஏற்றி வரும் லாரிகள் வேகத்தடைகளில் ஏறி, இறங்கும்போது அதிலிருந்து ஆணி உள்ளிட்ட இரும்பு பொருட்கள் சிதறி கீழே விழுந்து, அந்த சாலையில் வரும் மற்ற வாகனங்களின் டயரை பதம் பார்க்கின்றன’ என்றனர்.

கானூர் ஊராட்சிமன்றத் தலைவர் மு.மயில்சாமி கூறும்போது, ‘‘அதிக அளவில் கரும்புகை வெளியேறுவது தொடர்பாக தனியார் ஆலையிடம் பேசினோம். பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் பார்த்துக் கொள்ளும்படி அறிவுறுத்தியுள்ளோம். மக்களுக்கு தொந்தரவு இல்லாத வகையில், ஆலையை நடத்திக்கொள்ள வலியுறுத்தியுள்ளோம்,’’ என்றார்.

திருப்பூர் வடக்கு மாசுக்கட்டுப்பாட்டு செயற்பொறியாளர் சரவணக்குமார் கூறும்போாது, ‘‘கானூர் கிராமத்தில் உள்ள இரும்பாலையில் இருந்து அதிகளவில் புகை வெளியேறுவது தொடர்பாக, பொதுமக்களின் புகார் குறித்து விசாரிக்கிறோம்,’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x