Published : 23 Jun 2021 03:12 AM
Last Updated : 23 Jun 2021 03:12 AM

ஏடிஎம் டெபாசிட் இயந்திரங்களில் பல லட்சம் ரூபாய் நூதன திருட்டு- வட மாநில கும்பலை பிடிக்க தனிப்படை அமைப்பு

சென்னை வடபழனி, கீழ்ப்பாக்கம், விருகம்பாக்கம், வேளச்சேரி, தரமணி உள்ளிட்ட பகுதிகளில், எஸ்பிஐ வங்கியின் ஏடிஎம் இயந்திரங்களில் ஒரு கும்பல் நூதன முறையில் பணம் திருடியது. இரு தினங்களில் மட்டும் ரூ.48 லட்சம் வரை திருட்டு நடைபெற்றுள்ளது.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறும்போது, ``பணம் செலுத்தவும், எடுக்கவும் வசதியுள்ள ஏடிஎம் டெபாசிட் இயந்திரங்களில், ஏடிஎம் அட்டை மூலம் பணத்தை எடுப்பற்கான பொத்தான்களை அழுத்தும்போது பணம் வெளியே வரும். அப்போது, பணத்தை வெளிக்கொண்டு வரும் இயந்திரத்தின் வாயில் பகுதியை மூடவிடாமல், குறிப்பிட்ட நேரம் பிடித்துக் கொள்கிறார்கள்.

பணத்தை எடுத்துக்கொண்டு, சில விநாடிகள் மூடியைப் பிடிப்பதால் பணத்தை எடுக்கவில்லை என்று இயந்திரம், வங்கியின் சர்வருக்கு தகவல் அனுப்பிவிடும். இதனால் சம்பந்தப்பட்ட நபரின் வங்கிக் கணக்கில் இருந்து பணம் கழிக்கப்படாது. இந்த மோசடி மூலம் எவ்வளவு பணம் எடுத்தாலும், சம்பந்தப்பட்ட நபரின் வங்கிக் கணக்கில் பணம் இருந்துகொண்டே இருக்கும். ஆனால் ஏடிஎம் இயந்திரத்தில் இருக்கும் பணம் காலியாகிக் கொண்டே இருக்கும்.

இவ்வாறு தொடர்ச்சியாக பல்வேறு ஏடிஎம் இயந்திரங்களில் இருந்து இந்த கும்பல் பல லட்சம் ரூபாயை திருடியுள்ளது. இது தொடர்பாக எஸ்பிஐ தலைமைப் பொது மேலாளர் ராதாகிருஷ்ணன், காவல் ஆணையர் சங்கர் ஜிவாலிடம் நேற்று புகார் அளித்தார்'' என்றனர்.

இந்நிலையில், காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நேற்று காலை செய்தியாளர்களிடம் கூறியதாவது: எஸ்பிஐ வங்கியின் டெபாசிட் இயந்திரத்தில் நடைபெற்ற நூதனத் திருட்டில் 4 பேர் வரை ஈடுபட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். மாநிலம் முழுவதும் 18 இடங்களில் ரூ.48 லட்சம் திருடப்பட்டுள்ளது. சென்னையில் 7 ஏடிஎம் மையங்ளில் திருட்டு நடைபெற்றுள்ளது. இதேபோல, பிற வங்கிகளின் ஏடிஎம் மையங்களிலும் திருட்டு நடந்துள்ளதா என்று கேட்க உள்ளோம்.

வேறு மாநிலங்களில் இதேபோல திருட்டு நடைபெற்றுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அதனடிப்படையில் விசாரணை நடைபெறுகிறது.

ஏடிஎம் மையங்களில் உள்ள கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டும் விசாரணை நடைபெறுகிறது. இந்த வழக்கை மத்திய குற்றப் பிரிவுக்கு மாற்றுவது குறித்தும் ஆலோசித்து வருகிறோம்.

திருட்டில் ஈடுபட்டவர்களைக் கண்டறிந்து கைது செய்ய, தென் சென்னை காவல் கூடுதல் ஆணையர் என்.கண்ணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது" என்றார்.

எஸ்பிஐ தலைமைப் பொது மேலாளர் ராதாகிருஷ்ணன் கூறும்போது, "இந்த சம்பவத்தில் பொதுமக்களின் பணம் திருடப்படவில்லை. முழுக்க வங்கிப் பணம்தான் திருடப்பட்டுள்ளது. திருட்டையடுத்து, நாடு முழுவதும் பணம் டெபாசிட் செய்யும் இயந்திரத்தில் இருந்து பணம் எடுக்கும் வசதியை தற்காலிகமாக முடக்கியுள்ளோம்" என்றார்.

இதற்கிடையில், தனிப்படை போலீஸார் நேற்று இரவு ராஜஸ்தான், டெல்லி மற்றும் ஹரியானா மாநிலங்களுக்கு விரைந்துள்ளனர். அம்மாநில போலீஸாருடன் இணைந்து தலைமறைவாக உள்ள கொள்ளையர்களைக் கைது செய்ய வியூகம் அமைத்துள்ளனர். இதற்காக, சிசிடிவி கேமராக்களில் பதிவான உருவத்தை புகைப்படமாக எடுத்துச் சென்றுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x