Published : 23 Jun 2021 03:12 AM
Last Updated : 23 Jun 2021 03:12 AM

தாம்பரம் மின் கோட்டத்தில் தற்காலிக ஊழியர்கள் 50 பேர் பணிநீக்கம்: மின்வாரியத்தில் பணிகள் பாதிப்பு

மின் வாரியத்தில் பணிபுரிந்த தற்காலிக ஊழியர்கள் 50 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டதால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் மின்வாரிய பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

தாம்பரம் மின்வாரிய கோட்டத்தில் சமீபத்தில் தற்காலிக ஊழியர் ஒருவர் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார். இவருக்கு நிதி உதவி வழங்க வலியுறுத்தி தொழிற்சங்கத்தினர் போராட்டம் நடத்தியதை அடுத்து, தாம்பரம் கோட்டத்தில் பணிபுரியும் மின் ஊழியர்கள் தங்களால் இயன்ற தொகையை வசூலித்து அந்த குடும்பத்துக்கு நிதி உதவி செய்தனர்.

தாம்பரம் கோட்டத்தில் 25 உதவி பொறியாளர் அலுவலகங்கள் உள்ளன. இந்த அலுவலகங்களில் தலா 5 தற்காலிக ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு மாதம் ரூ.3000 ஊதியம் வழங்கப்படுகிறது. இந்நிலையில் இந்த விபத்தை காரணம் காட்டி தற்காலிக ஊழியர்கள் சுமார் 50 பேரை வேலை செய்ய அனுமதிக்கவில்லை.

ஆட்கள் பற்றாக்குறை

`உங்களால் மின்வாரியத்துக்கு கெட்ட பெயர் ஏற்பட்டுள்ளது' எனக் கூறி வேலை செய்ய அனுமதிக்க அதிகாரிகள் மறுத்துவிட்டனர். எனவே, இவர்கள் செய்வதறியாமல் தவித்து வருகின்றனர்.

இதுகுறித்து தொழிற்சங்கத்தினர் கூறியதாவது:

மின் வாரியத்தில் ஏற்கெனவே ஆட்கள் பற்றாக்குறை கடுமையாக உள்ளது. எனவே, தற்காலிக ஊழியர்களை கொண்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போது 50-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் 10 ஆண்டுகளுக்கு மேலாக இதில் பணிபுரிகின்றனர். ஊழியர்கள் பணி செய்ய மறுக்கப்பட்டுள்ளதால் மின் வாரியத்தில் தற்போது பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மேலும், தொழிலாளர்களின் குடும்பத்தின் நிலையை உணர்ந்து அவர்களுக்கு மீண்டும் வேலை வழங்க வேண்டும்.

இதில் அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் போராட்டம் நடத்துவதைத் தவிர வேறு வழியில்லை என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x