Published : 23 Jun 2021 03:12 AM
Last Updated : 23 Jun 2021 03:12 AM

புதுச்சேரி தட்டாஞ்சாவடியில் ரூ.220 கோடியில் புதிய சட்டப்பேரவை வளாகம்: மத்திய அரசு உதவியுடன் 16 மாதங்களில் கட்டி முடிக்க திட்டம்

புதுச்சேரிக்கு புதிய சட்டப்பேரவை கட்டும் பணி ரூ. 220 கோடியில் தட்டாஞ்சாவடியில் தொடங் கப்படவுள்ளது. 16 மாதங்களில் இப்பணியை நிறைவு செய்ய திட்டமிட்டுள்ளனர்.

புதுவை கடற்கரை சாலை பாரதி பூங்கா அருகில் பிரெஞ்சு ஆட்சியர் காலத்தில் கட்டப்பட்ட கட்டிடத்தில் புதுவை சட்டப்பேரவை இயங்கி வருகிறது.

சட்டப்பேரவை மைய மண்டபம் சுமார் 100 ஆண்டுகளுக்கு மேலான பழமையான கட்டிடமாகும். அதனைச் சுற்றி புதிதாக கட்டிடங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மைய மண்டபம் செயல்படும் கட்டிடத் திற்கு பின்புறம் கடந்த 2006 ம் ஆண்டு 3 தளங்கள் கொண்ட புதிய கட்டிடம் கட்டப்பட்டு திறக்கப்பட்டது. அதன் மேல் உள்ள மாடியில் குடிநீர் தொட்டிகள் பில்லர் அமைக்கப்பட்டு கட்டப்பட்டுள்ளது.

பழைய கட்டிடம் இருமுறை சேதமாகி புதுப்பிக்கப்பட்டுள்ளது. இடப்பற்றாக்குறை உள்ளதால் முதல்வர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு செயலர்கள் சட்டமன்ற வளாகத்திற்குள் வாகனங்களில் வந்து செல்வதில் சிரமம் ஏற்பட்டது. இவைகளை கருத்தில் கொண்டே கடந்த என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியில் தட்டாஞ்சாவடி தொகுதியில் புதிய சட்டப்பேரவை கட்டும் திட்டம் அறிவிக்கப்பட்டது.

இதற்காக இரு சாலைகள் கொண்ட பகுதியில் நிலமும் கையகப்படுத்தப்பட்டது. புதிய சட்டப்பேரவை கட்டும் திட்டம் பொலிவுறு நகர திட்டத்திலும் சேர்க்கப்பட்டது.

மத்திய அரசும் நாடாளுமன்றத் தின் மூலம் அனைத்து மாநிலங் களிலும் புதிய சட்டமன்ற வளா கம் கட்டுவதற்கு நிதி தரவும் முன்வந்துள்ளது. ஆனால் புதிய சட்டமன்ற கட்டிடம் கட்டும் திட்டத்திற்கான நடவடிக்கைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு செய்து முடிக்கப்படவில்லை.

இந்நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் முதலில் அந்த திட்டத்தை கடந்த காங்கிரஸ் அரசும் மேற்கொள்ள இருப்பதாக அறிவித்தது.

ஆனால் ஆட்சியில் கடைசிஆண்டில் புதிய சட்டப் பேரவை கட்டும் திட்டம் கைவிடப்பட்டுள்ளதாக ஆளுநருக்கு கோப்பு அனுப்பப்பட்டது. அதில் கூடுதல் விவரங்களை கேட்டிருந்தார். இந்நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் புதிய சட்டப் பேரவையை தட்டாஞ்சாவடியில் கட்ட முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர் செல்வம் காணொலி மூலமாக மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவுடன் நேற்று மாலை கலந்துரையாடினார்.

புதுச்சேரியில், சட்டப்பேரவை செயலர் முனிசாமி, பேர வைத்தலைவரின் தனிச்செயலர் தயாளன் ஆகியோரும் பங்கேற் றனர்.

இதுதொடர்பாக சட்டப்பேர வைத்தலைவர் செல்வம் கூறு கையில், "நாடு முழுவதுமுள்ள சட்டப்பேரவை தலைவர்கள் பங்கேற்ற காணொலி கூட்டம் நாடாளுமன்றத்தலைவர் ஓம் பிர்லா தலைமையில் நடந்தது.

புதிதாக கட்டப்பட உள்ள சட்டப்பேரவைக்கு ரூ. 220 கோடி நிதியை மத்திய அரசே ஒதுக்க கோரிக்கை வைத்தேன். அதற்கு நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இரண்டு ஆண்டுக்குள் மத்திய அரசு உதவியுடன் புதுச்சேரியில் புதிய சட்டப்பேரவை வளாகம் அமைக்கப்படும். கரோனாஇரண்டாவது அலை தாக்கத்தில் புதுச்சேரி அரசு செயல்பாட்டை கேட்டறிந்தார். தடுப்பூசி போடப் பட்டோர் விவரத்தையும் கேட்டறிந் தார். மக்களுக்கு தேவையான நலத்திட்டங்களை செயல்படுத்த பிரதமர் உறுதுணையாக இருப்பார் என்ற நம்பிக்கையுடன் உள்ளோம்" என்று குறிப்பிட்டார்.

காணொலி மூலமாக மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவுடன் பேரவைத் தலைவர் கலந்துரையாடினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x