Published : 03 Dec 2015 01:07 PM
Last Updated : 03 Dec 2015 01:07 PM

வெள்ளம் பாதித்த கடலோர மாவட்டங்களில் மீட்பு நடவடிக்கை துரிதம்: சென்னையில் ஆயிரக்கணக்கானோர் பத்திரமாக மீட்பு

வடசென்னையில் சுணக்கம்: ஆயிரக்கணக்கானோர் தவிப்பு

*

வெள்ளம் சூழந்த சென்னையில் இதுவரை ஏறத்தாழ 2,500 பேர் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில், கடலூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் மீட்பு நடவடிக்கைகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.

சென்னையில் புதன்கிழமை நள்ளிரவு தொடங்கி இன்று பிற்பகல் வரை மழை பெய்யாததால் மீட்புப் பணிகளும் துரிதமாக நடைபெற்றன. கரையோரப் பகுதிகளில் வெள்ளப் பெருக்கு சற்று குறைந்தது.

சென்னை, கடலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம் உள்ளிட்ட வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் தேசிய பேரிடர் மீட்புப் படையினரின் உறுதுணையுடன் மீட்பு நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தென் சென்னையில் தீவிர மீட்பு நடவடிக்கை நடைபெறும் அதேவேளையில், வடசென்னையில் மீட்புப் பணிகள் சரிவர நடைபெறாததால் அப்பகுதி மக்கள் கொந்தளித்தனர்.

சென்னையில் மழை, வெள்ள பாதிப்புகளை ஹெலிகாப்டர் மூலம் நேரில் பார்வையிட்ட முதல்வர் நரேந்திர மோடி, மழை வெள்ள பாதிப்புகளை சரிசெய்ய உடனடியாக ரூ.1,000 கோடி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். விரிவான செய்திக்கு >தமிழக வெள்ள நிவாரண உதவிகளுக்கு ரூ.1000 கோடி: பிரதமர் மோடி ஒதுக்கீடு

தமிழகத்தில் மழை, வெள்ள பாதிப்புகளை சரி செய்ய உடனடி நிவாரணமாக ரூ. 5,000 கோடி வழங்க வேண்டும் என முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மோடியிடம் நேரில் கோரிக்கை விடுத்துள்ளார். விரிவான செய்திக்கு >உடனடி நிவாரணமாக ரூ.5,000 கோடி வழங்குக: மோடியிடம் ஜெயலலிதா நேரில் கோரிக்கை

கோட்டூர்புரத்தில் மட்டும் மழை வெள்ளத்தில் சிக்கித் தவித்த நூற்றுக்கணக்கான மக்களை இன்று மீட்புக் குழுவினர் படகுகள் மூலமாகவும், கயிறுகள் கொண்டும் மீட்டுள்ளனர். தகவல், சிறப்புப் படங்களுக்கு >பேசும் படங்கள்: கோட்டூர்புரத்தில் நூற்றுக்கணக்கானோர் மீட்பு

சென்னை காசிமேடு அகில இந்திய பாரம்பரிய மீனவர் சங்கத்தைச் சேர்ந்த 24 மீனவர்கள் கொண்ட குழு 6 படகுகள் மூலம் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். அவர்கள் 500-க்கும் மேற்பட்டோரை பத்திரமாக மீட்டுள்ளனர்.முழுமையான செய்திக்கு >சென்னை ராமாபுரம் நிலவரம்: காசிமேடு மீனவர் குழுவால் நூற்றுக்கணக்கானோர் மீட்பு

தென்மேற்கு வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளதால் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு கன மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. விரிவான செய்திக்கு >அடுத்த 3 நாட்களுக்கு கன மழை நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

செம்பரம்பாக்கம்,மதுராந்தகம், வீராணம் ஏரிகளில் உபரி நீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது. இதனால் கரையோரப் பகுதிகளில் வெள்ளப் பெருக்கு சற்று குறைந்தது.பூண்டி ஏரியில் திறக்கப்படும் உபரி நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. முழுமையான செய்திக்கு: >செம்பரம்பாக்கம், மதுராந்தகம், வீராணம் ஏரிகளில் உபரி நீர் திறப்பு குறைப்பு; பூண்டி ஏரியில் உபரி நீர் திறப்பு அதிகரிப்பு

ஆயிரக்கணக்கானோர் மீட்பு

அவ்வப்போது கொட்டித் தீர்க்கும் கனமழையிலும் மக்களின் உயிர் காக்கும் பணிகளில் மீட்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணியில் தமிழக போலீஸார், தமிழக கடலோரக் காவல் குழும போலீஸார், தமிழக தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர், தேசிய பேரிடர் மீட்புப் படையினர், இந்திய கடலோர காவல் படையினர், இந்திய ராணுவம் ஆகிய பலதரப்பட்ட படை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

சென்னையைப் பொறுத்தவரையில், மழை வெள்ளத்தில் மூழ்கிய வீடுகளில் சிக்கியவர்களில் ஏறத்தாழ 2,500 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

கடலூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் நூற்றுக்கணக்கானோர் மீட்கப்பட்ட நிலையில், வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் ஆயிரக்கணக்கானோரை மீட்கும் பணிகள் தொடர்கிறது.

மீட்புப் பணிகளில் ராணுவ ஹெலிகாப்டர்கள்

ஒரு பக்கம் மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், மறுபக்கம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு ராணுவ ஹெலிகாப்டர்கள் மூலம் உணவு, நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

வடசென்னையில் ஆயிரக்கணக்கானோர் தவிப்பு

வட சென்னையின் பல பகுதிகளில் இன்னும் மீட்புப் பணிகள் தொடங்கப்படவில்லை. அத்தியாவசியப் பொருட்கள் கூட வழங்கப்படாததால், அங்கே மக்கள் எதிர்ப்பு வலுக்கிறது.

தண்டையார்பேட்டை, சத்தியமூர்த்தி நகர், வள்ளலார் நகர், கொடுங்கையூர் மற்றும் மின்ட் ஆகிய பகுதிகள் முழுமையாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இங்குள்ள அனைத்துப் பகுதிகளிலும், தண்ணீர் இல்லாத இடங்களைக் காண முடியவில்லை. ஆம்புலன்ஸ் உள்ளிட்ட எந்த சேவையும், இப்பகுதிகளை அணுக முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஆயிரக்கணக்கான மக்கள், வள்ளலார் நகர் பாலத்தின் வழியாகச் செல்ல முயன்றதால், மின்ட் பாலம் வழியான போக்குவரத்து முழுமையாகத் துண்டிக்கப்பட்டுள்ளது.

வள்ளலார் நகர் பாலத்தின் வழி துண்டிக்கப்பட்டதால், மக்கள் ஆத்திரமடைந்தனர். இது குறித்துப் பேசிய வட சென்னை மக்கள், "அரசாங்கத்தைப் பொறுத்தவரை, சென்னை போயஸ்கார்டனில் தொடங்கி, கோபாலபுரத்தில் முடிந்துவிடுகிறது. இதுவரைக்கும் நாங்கள் சென்னை குடிமக்களாகவே கருதப்படவில்லை. அதன் விளைவை இன்று எல்லோரும் பார்க்கிறீர்கள்" என்றதாக 'தி இந்து' ஆங்கில செய்தியாளரிடம் ஆவேசமாக கூறினர்.

வானிலை முன்னறிவிப்பு:

தமிழக கடலோர மாவட்டங்களில் அடுத்த 48 மணி நேரத்துக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மைய தலைமை இயக்குநர் எல்.எஸ்.ராத்தூர் இன்று முற்பகல் டெல்லியில் தெரிவித்துள்ளார்.

முதல்வர் ஜெயலலிதா ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் முதல்வர் ஜெயலலிதா ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு செய்யும் பணியை இன்று முற்பகலில் தொடங்கினார்.

மோடி சென்னைக்கு வருகை

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களைப் பார்வையிட, பிரதமர் நரேந்திர மோடி சென்னை வருகிறார். இன்று மாலை 4 மணிக்கு, தனி விமானம் மூலம் சென்னை வருவார் எனத் தெரிகிறது.

மக்களவையில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் வெளியிட்ட தகவல்கள்:

மக்களவையில் சிறப்பு கவன ஈர்ப்பாக, மத்திய உள்துறையில் அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று தமிழக வெள்ள பாதிப்புகள் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளித்துப் பேசினார். அதன் முக்கிய அம்சங்கள்:

* 100 வருடங்களில் இல்லாத அளவுக்கு இப்போது கனமழை பெய்துள்ளது. மத்திய அரசு, தமிழகத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது.

* தமிழகத்தில் மழை, வெள்ளத்துக்கு இதுவரை 269 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கே தொலைதொடர்பு சேவை முழுமையாக துண்டிக்கப்பட்டுள்ளது. 40 சதவீத மொபைல் சேவைகளும், 20 சதவீத லேண்ட்லைன் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

* இதுவரையிலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்காக 30 தேசிய பேரிடர் குழுக்கள் தமிழகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன.

முந்தையச் செய்திப் பதிவுகள்:

சென்னையைப் பொறுத்தவரையில், தமிழக கடலோரக் காவல் குழும போலீஸார் முடிச்சூர் உள்ளிட்ட பகுதியில் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். செவ்வாய்க்கிழமை காலையிலிருந்து இடைவிடாது மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். ஏடிஜிபி சைலேந்திரபாபு தலைமையில் 30 கமாண்டோ வீரர்கள் மற்றும் நீச்சல் பயிற்சி பெற்ற 15 பேர் கொண்ட குழுவினர் 6 படகுகள் மூலம் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

தமிழக தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் சென்னையில் வெள்ளம் சூழ்ந்த அனைத்துப் பகுதிகளிலும் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

ஈக்காட்டுதாங்கல், கோட்டூர் புரம், சைதாப்பேட்டை, முடிச்சூர், தாம்பரம் உட்பட பல்வேறு பகுதிகளில் மீட்பு நடவடிக்கையில் இரவு பகலாக ஈடுபட்டுள்ளனர்.

சென்னை மற்றும் அண்டை மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 750 பேர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் 200 வீரர்கள் வேறு சில மாவட்டங்களிலிருந்து வரவழைக்கப்பட்டுள்ளனர். 25 படகுகள், 30 தீயணைப்பு வாகனங்கள், 3 தண்ணீர் இரைக்கும் மோட்டார் பம்ப்புகள் கொண்டு மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்திய கடலோரக் காவல் படை...

இந்திய கடலோரக் காவல் படை கிழக்கு பிராந்தியம் சார்பில் 3 மிதவை படகுடன் 17 பேர் கொண்ட மீட்புக் குழுவினர் சைதாப்பேட்டை பகுதியில் சென்னை மாநகராட்சி நிர்வாகம் மற்றும் போலீஸாருடன் இணைந்து மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், மீட்பு நடவடிக்கைக்காக கடலோரக் காவல்படைக்கு சொந்தமான விமானம் மீனம்பாக்கத்தில் தயார் நிலையில் உள்ளது. மீனம்பாக்கம் விமான நிலையத்தில் வெள்ளம் சூழ்ந்து விமானங்களை இயக்குவதற்கு தயாராக இல்லாததால் அந்த விமானத்தை மீட்பு நடவடிக்கைக்கும், உணவுப் பொருட்களை விநியோகம் செய்வதற்கும் பயன்படுத்த முடியவில்லை. விமான நிலையம் தயாரானதும் மீட்பு நடவடிக்கையில் இந்த விமானம் பயன்படுத்தப்படும் என கடலோரக் காவல் படை செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் முடிச்சூர், கோட்டூர்புரம் பகுதியில் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். தமிழக போலீஸாரும் சேதமடைந்த சாலைகள், தண்ணீரில் மூழ்கிய சாலைகள், சுரங்கப்பாதைகளில் போகுவரத்தை தடை செய்து அசம்பாவிதங்கள் நிகழாதபடி பார்த்துக் கொண்டனர். சில பகுதிகளில் போக்குவரத்தை மாற்றிவிட்டு நிலைமையை சரி செய்தனர். சேதமடைந்த சாலைகளை கற்களைக் கொட்டியும், குழிகளில் தடுப்புகளை ஏற்படுத்தியும் சரி செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x