Published : 23 Jun 2021 03:13 AM
Last Updated : 23 Jun 2021 03:13 AM

தூத்துக்குடி மாவட்டத்தில் அதிமுக வசமுள்ள உள்ளாட்சி அமைப்புகளை கைப்பற்ற திமுகவினர் முயற்சி: ஆட்சியரிடம் அதிமுக நிர்வாகிகள் புகார்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜிடம் மனு அளித்த அதிமுக தெற்கு மாவட்டச் செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன், மாவட்ட ஊராட்சித் தலைவர் ஆர்.சத்யா, சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் எஸ்.ஜெயபதி உள்ளிட்டோர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் அதிமுக வசம் உள்ள உள்ளாட்சி அமைப்புகளை கைப்பற்ற திமுகவினர் முயற்சி செய்வதாக அதிமுக நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவித்தனர்.

தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் தலைமை யில் மாவட்ட ஊராட்சித் தலைவர் ஆர்.சத்யா, சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் எஸ்.ஜெயபதி மற்றும் உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜிடம் அளித்த மனு விவரம்:

அதிமுக உறுப்பினர்களின் முழு ஆதரவோடு மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவராக சத்யா தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவராக திமுகவை சேர்ந்த ஒருவரை கொண்டு வருவதற்காக திமுகவினர் சட்ட விதிகளுக்கு எதிராக செயல்பட்டு வருகின்றனர். அதிமுக மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர்களாகிய எங்களின் பெயர்களை திமுகவுக்கு ஆதரவாக இணைத்து விண்ணப்பம் தயார் செய்து நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர அனுமதி கோரியுள்ளதாக தெரிகிறது.

இது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. எங்களுடைய ஒப்புதல் இல்லாமல் எங்களின் பெயரை சேர்த்துக்கொண்டு மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வர முயற்சி செய்யும் திமுகவினரின் மோசடியான செயல்பாடுகளை தடுத்து நிறுத்திட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனுவில் அதிமுக உறுப்பினர்கள் 8 பேர் கையெழுத்திட்டுள்ளனர்.

இதுபோல் சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் எஸ்.ஜெயபதி அளித்த மனுவில், ‘சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் 14 வார்டு உறுப்பினர்களுக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் அதிமுகவை சேர்ந்த 9 பேர் வெற்றி பெற்றோம். 2 சுயேச்சை உறுப்பினர்களும் எங்களுக்கு ஆதரவு அளித்தனர். அதன் அடிப்படையில் தலைவராக நானும், துணைத் தலைவராக எஸ்.அப்பாத்துரையும் தேர்வு செய்யப்பட்டோம்.

இந்நிலையில் அதிமுக உறுப்பினர்களை பணியாற்ற விடாமல் தடுப்பதுடன், மிரட்டியும், சட்டவிரோதமாக குதிரை பேரம் நடத்தியும் வருகின்றனர். இதனால் எங்களால் பணியாற்ற முடியவில்லை. வீடுகளிலும் பாதுகாப்பாக இருக்க முடியவில்லை. எனவே, இந்த சட்டவிரோத செயல்களை உடனே தடுத்து நிறுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x