

அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியம் செம்பியன் மாதேவி பேரேரி தூர் வாரப்படாமல் தூர்ந்துபோய் கிடந்தது. இந்த ஏரியை தூர் வார வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கடந்த 50 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில், பொதுப்பணித் துறை, கனிமவளத் துறை சார்பில் ரூ.1.18 கோடி மதிப்பில் இந்த ஏரியை தூர் வாரும் பணிகள் அண்மையில் தொடங்கியுள்ளன. முதலில் ஏரி முழுவதும் இருந்த சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்பட்டு, கரைகள் பலப்படுத்தப்பட்டன. தொடர்ந்து 100 அடி நீளம், 100 அடி அகலத்துக்கு மட்டும் தூர் வாரப்படுகிறது. மேலும், நபார்டு வங்கி மூலம் ரூ.4.45 கோடி மதிப்பில் கலிங்கு, வடிகால் ஷட்டர்கள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து கண்டராதித்தம் விவசாயிகள் சக்திவேல், தர்மராஜ் ஆகியோர் கூறியது:
விவசாயிகளின் 50 ஆண்டுகால கோரிக்கையை ஏற்று ஏரி தூர் வாரும் பணி நடைபெற்று வந்தாலும், தற்போது தூர் வாரப்படும் பகுதியில் தண்ணீர் தேங்கும்போது, ஷட்டரை திறந்தால் தண்ணீர் முழுவதும் வெளியேறும் வகையில் உள்ளது. எனவே, ஏரியின் மையப்பகுதியில் 100 ஏக்கர் அளவுக்கு வெட்டி மண்ணை வெளியேற்றினால் ஆண்டு முழுவதும் தண்ணீர் தேங்கும்.
ஏரியின் கிழக்குப் பகுதி சற்று தாழ்வாக இருப்பதால், இங்கு தண்ணீர் தேங்கும் சமயங்களில், இந்தக் கரையை ஒட்டிய பகுதியில் உள்ள நிலங்களில் தண்ணீர் எப்போதும் ஊற்று எடுத்துக்கொண்டே இருக்கும். இதனால், அறுவடையின்போது சிரமம் ஏற்படு வதால், தூர்வாரப்படும் மண்ணை, தாழ்வான பகுதியில் கொட்டி உயர்த்தினால், விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்றனர்.
இதுகுறித்து பொதுப்பணித் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “தற்போது முதற்கட்ட தூர் வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன. விவசாயிகளின் கோரிக்கைப்படி அடுத்தக்கட்ட பணிகள் மேற்கொள்ளப் படும்” என்றனர்.
இதற்கிடையே, ஏரியை அண்மை யில் பார்வையிட்ட எம்எல்ஏ கு.சின்னப்பா, “ஏரி முழுமையையும் தூர்வார நிதி ஒதுக்கீடு செய்ய தமிழக முதல்வரிடம் வலியுறுத்தப்படும்” என்றார்.