கரோனா 3-வது அலை வராது; வரக்கூடாது; வந்தாலும் எதிர்கொள்ளத் தயார்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

கரோனா 3-வது அலை வராது; வரக்கூடாது; வந்தாலும் எதிர்கொள்ளத் தயார்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
Updated on
1 min read

தமிழகத்தில் அனைத்து வகைகளிலும் மிகச்சிறந்த கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டு இருப்பதால் நிச்சயம் மூன்றாவது அலை என்று ஏதும் வராது. அப்படி வந்தாலும், அதை எதிர்கொள்வதற்குத் தமிழகம் தயாராக இருக்கிறது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (22-06-2021) சட்டப்பேரவையில் ஆற்றிய உரை:

''கரோனாவிற்குப் பிறகு ஏற்படுகிற பாதிப்புகளைக் கண்டறிவதற்கு எல்லா மருத்துவமனைகளிலும் மருத்துவர்கள் நியமிக்கப்பட்டு, தமிழக முதல்வர் ஏற்கெனவே அறிவித்த கட்டளை மையம் , ஒருங்கிணைந்த கட்டளை அரங்கங்களில் பணியாற்றுகிற அலுவலர்களின் மூலம் எல்லா நோயாளிகளையும் தொடர்புகொண்டு, தொலைபேசியில் அவர்களுடைய நிலை கண்டறியப்பட்டு வருகிறது.

இந்த அரசு கரோனா தொற்றை முற்றிலுமாக ஒழிப்பதற்கான முழு நடவடிக்கைகளையும் நிச்சயம் எடுத்து, மிகப்பெரிய அளவிலான வெற்றியைப் பெற்றிருக்கிறது. குறுகிய காலத்தில் வெற்றி என்பது மிகப்பெரிய அளவில் மக்கள் மகிழ்ச்சியாகக் கொண்டாடுகிற வெற்றியாக இருந்து கொண்டிருக்கிறது.

தடுப்பூசியைப் பொறுத்தவரையில், ஜனவரி 16ஆம் தேதிதான் போடத் தொடங்கப்பட்டது. ஐந்து மாதங்களாகப் போடப்பட்டு வந்தது. 5 மாதங்களாகச் செலுத்தப்பட்ட தடுப்பூசி நாளொன்றுக்கான சராசரியாக 61,441 ஆகக் கடந்த மே மாதம் 7ஆம் தேதி வரை இருந்தது. 7ஆம் தேதிக்குப் பிறகு இன்றுவரை தடுப்பூசி செலுத்தப்பட்டுக் கொண்டிருக்கிற நாளொன்றுக்கான எண்ணிக்கை என்பது 1,34,926 ஆக உயர்ந்திருக்கிறது.

மூன்றாவது அலைக்கான முன்னெச்சரிக்கை என்னென்ன எடுக்கப்பட்டிருக்கிறது என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் மூன்றாவது அலைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தினந்தோறும் எங்களைப் போன்றவர்களிடத்தில் கேட்டுத் தெரிந்து உடனடியாக அதைச் செய்யுங்கள், இதைச் செய்யுங்கள் என்று சொல்லிக்கொண்டிருப்பதோடு மட்டுமல்லாமல், அவரே களத்தில் இறங்கி, ஆய்வும் செய்துகொண்டிருக்கிறார்.

நேற்று முன்தினம் (ஜூன் 20) 250 படுக்கைகள் கொண்ட எழும்பூர் மருத்துவமனைக்கு நேரடியாகச் சென்று குழந்தைகளுக்காக பிரத்யேகமாக அமைக்கப்பட்டிருக்கிற வார்டு குறித்த ஆய்வை மேற்கொண்டார். தமிழகத்தைப் பொறுத்தவரை, இந்த ஒன்றரை மாதத்தில் 79,618 புதிய படுக்கைகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. அனைத்து மருத்துவமனைகளிலும் சிலிண்டர்கள் புதிதாக அமைக்கப்பட்டிருக்கின்றன. ஆக்சிஜன் செறிவூட்டிகள், ஆக்சிஜன் ஜெனரேட்டர்கள் என்று அனைத்து வகைகளிலும் மிகச்சிறந்த கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.

எனவே, நிச்சயம் மூன்றாவது அலை என்று ஏதும் வராது, வரக்கூடாது, வரவே கூடாது. அப்படி வந்தாலும், அதை எதிர்கொள்வதற்குத் தமிழகம் தயாராக இருக்கிறது.''

இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in