முழுக்கவச உடை அணிந்து கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் கரோனா நோயாளிகளைச் சந்தித்த ஆட்சியர்

முழுக் கவச உடை அணிந்து கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளியிடம் இன்று நேரில் தேவைகளைக் கேட்டறிந்த மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன். உடன், உதவி ஆட்சியர் (பயிற்சி) சரண்யா உள்ளிட்டோர்.
முழுக் கவச உடை அணிந்து கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளியிடம் இன்று நேரில் தேவைகளைக் கேட்டறிந்த மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன். உடன், உதவி ஆட்சியர் (பயிற்சி) சரண்யா உள்ளிட்டோர்.
Updated on
1 min read

கோவை, சிங்காநல்லூர் இஎஸ்ஐ மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் இன்று (ஜூன் 22) முழுக்கவச உடை (பிபிஇ கிட்) அணிந்து கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் பிரிவுக்குச் சென்று, நோயாளிகளின் தேவைகளைக் கேட்டறிந்தார்.

மேலும், கோவை அரசு மருத்துவமனை, இஎஸ்ஐ மருத்துவமனையில் கரோனா தொற்றால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமைக்கப்பட்டுள்ள கூடுதல் படுக்கை வசதிகளையும் ஆட்சியர் பார்வையிட்டார்.

இது தொடர்பாகச் சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறும்போது, "குழந்தைகள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் கோவை அரசு மருத்துவமனை குழந்தைகள் நலப் பிரிவில் 30 தீவிர சிகிச்சைப் படுக்கைகள், 100 ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள், 370 சாதாரணப் படுக்கைகள் என 500 படுக்கைகளும், இஎஸ்ஐ மருத்துவமனையில் 100 தீவிர சிகிச்சைப் படுக்கைகள், 70 ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் என மொத்தம் 170 படுக்கை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன” என்று தெரிவித்தனர்.

ஆட்சியர் ஆய்வின்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கவிதா, கோவை அரசு மருத்துவமனை டீன் டாக்டர் நிர்மலா, இஎஸ்ஐ மருத்துவமனை டீன் டாக்டர் ரவீந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in