அண்ணாநகர் மண்டலத்தில் அதிக குப்பைகள்: ஒரே வாரத்தில் 7 ஆயிரம் டன் அகற்றம்

அண்ணாநகர் மண்டலத்தில் அதிக குப்பைகள்: ஒரே வாரத்தில் 7 ஆயிரம் டன் அகற்றம்
Updated on
1 min read

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மாநகராட்சி மண்டலங்களில் அண்ணாநகர் மண்டலத்தில் மட்டும் கடந்த ஒரு வாரத்தில் அதிகபட்ச அளவாக 7 ஆயிரத்து 176 டன் குப்பை கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன.

மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட சென்னை மாநகரப் பகுதியில் கடந்த 6-ம் தேதியிலிருந்து ஒரு வாரமாக சிறப்பு தூய்மைப் பணி நடைபெற்று வருகிறது. இப்பணியில் சென்னை மாநகராட்சியின் 25 ஆயிரம் துப்புரவு தொழிலாளர்கள், தமிழகத்தின் பிற 11 மாநகராட்சிகள், 23 நகராட்சிகள் மற்றும் 50-க்கும் மேற்பட்ட பேரூராட்சிகளில் இருந்து 10 ஆயிரம் தொழிலாளர்கள் என மொத்தம் 35 ஆயிரம் பேர் ஈடுபட்டு வருகின்றனர். 619 டிப்பர் லாரிகள், 115 காம்பாக்டர்கள், 116 பொக்லைன் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

நேற்று முன் தினம் (சனிக்கிழமை) வரையிலான ஒரு வாரத்தில் 64 ஆயிரத்து 177 டன் குப்பை அகற்றப்பட்டுள்ளது. சென்னை மாநகரப் பகுதியில் வழக்கமாக நாளொன்றுக்கு 4 ஆயிரத்து 500 டன் குப்பை அகற்றப்படும். நேற்று ஒரு நாள் மட்டும், வழக்கமாக அகற்றப்படுவது போன்று 3 மடங்கு, அதாவது 14 ஆயிரத்து 268 டன் குப்பை அகற்றப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி பகுதியில் உள்ள 15 மண்டலங்களில் கூவம் ஆறு பாயும் அண்ணாநகர் மண்டலத்தில் ஒரு வாரத்தில் அதிக அளவாக 7 ஆயிரத்து 176 டன் குப்பை அகற்றப்பட்டுள்ளது. குறைந்தபட்ச அளவாக மாதவரம் மண்டலத்தில் 917 டன் குப்பை அகற்றப்பட்டுள்ளன.

அண்ணாநகர் மண்டலத்தில் அதிக அளவு குப்பை உருவான தற்கான காரணம் குறித்து அம்மண் டலத்தைச் சேர்ந்த மாநகராட்சி அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, “இம்மண்டலத்தில் கூவம் ஆறு, அண்ணாநகர் மேற்கு விரிவாக்கத்தில் தொடங்கி, அண்ணாநகர் வழியாக மேத்தாநகர் வரை பாய்கிறது. கூவம் ஆறு பாயும் பகுதியில் மட்டும் 7 மாநகராட்சி வார்டுகள் வருகின்றன. மழை வெள்ளத்தின் போது, கூவம் ஆற்றில் இருந்த குப்பை, சேறு ஆகியவை குடியிருப்புப் பகுதிகளில் உள்ள சாலைகளில் வந்து குவிந்துவிட்டன. அதனால்தான் இம்மண்டலத்தில் அதிக குப்பை அள்ளப்பட்டது” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in