Last Updated : 22 Jun, 2021 04:28 PM

 

Published : 22 Jun 2021 04:28 PM
Last Updated : 22 Jun 2021 04:28 PM

தமிழகத்தில் வேளாண் துறையில் 2013 முதல் ரூ.1000 கோடிக்கு மேல் முறைகேடு: ஐஏஎஸ் அதிகாரியை எதிர்மனுதாரராக சேர்க்க உத்தரவு

தமிழக வேளாண்துறையில் 2013 முதல் ரூ.1000 கோடிக்கு மேல் முறைகேடு நடைபெற்றிருப்பதாகவும், இதில் தொடர்புடைய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் தாக்கலான வழக்கில் ஐஏஎஸ் அதிகாரி தக்ஷிணாமூர்த்தியை எதிர்மனுதாரராக சேர்க்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருச்சியைச் சேர்ந்த அப்துல்லா, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு.

தமிழக வேளாண்மைத் துறையில் விவசாயத் திட்டங்களில் 2013 முதல் முறைகேடு நடைபெற்று வந்துள்ளது. இந்த முறைகேட்டில் 2013 முதல் வேளாண் துறையில் பதவி வகித்த இயக்குனர்கள், வேளாண் அலுவலர்கள், உதவியாளர்கள் என பலருக்கும் தொடர்பு உள்ளது.

சொட்டு நீர்p பாசன திட்டத்திற்கான உபகரணங்களை வழங்குதல், மானிய விலையில் இயந்திரங்கள் கொள்முதல் செய்தல், விதை கொள்முதல், காமிரா, லேப்டாப், கம்யூட்டர் கொள்முதல், தமிழ்நாடு நீர்நிலை மேம்பாட்டு முகமை திட்டம், நிலையான நீர்ப்பாசன திட்டம், உழவர் உற்பத்தியாளர் குழு திட்டம், டெல்டா பகுதி குறுவை, சம்பா தொகுப்பு திட்டம், விதை கொள்முதல் திட்டம், பயிர் காப்பீட்டு திட்டங்களை போலி விவசாயிகளுக்கு வழங்கியுள்ளனர்.

இந்த முறைகேட்டில் 2016 முதல் 2021 வரை வேளாண் இயக்குனராக இருந்த தக்ஷிணாமூர்த்திக்கும் தொடர்பு உள்ளது. அவர் முன்னாள் வேளாண் அமைச்சரின் உறவினர் ஆவார். ரூ.ஆயிரம் கோடிக்கு மேல் முறைகேடு நடைபெற்றுள்ளது. இது தொடர்பாக வேளாண் இயக்குனர் தக்ஷிணாமூர்த்தி மது லஞ்ச ஒழிப்புத்துறையிடம் புகார் அளிக்கப்பட்டு நிலுவையில் உள்ளது.

இந்த முறைகேட்டில் தொடர்புடைய அதிகாரிகள் பலர் பணி ஓய்வு பெற்றுவிட்டனர். பலர் வேறு இடங்களுக்கு பணியிட மாற்றம் பெற்றுள்ளனர். எனவே, தமிழகத்தில் கடந்த 2013 முதல் 2021 வரை வேளாண் துறையில் ரூ1000 கோடிக்கு மேல் முறைகேடு செய்துள்ள அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி அமர்வில் அமர்வில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் ஐஏஎஸ் அதிகாரி தக்ஷிணா மூர்த்தியை எதிர்மனுதாரராக சேர்க்க உத்தரவிட்டு, விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x