ஆளுநர் உரையை விமர்சிப்பதைவிட முதல்வரின் செயல்களைப் பாராட்டலாமே: கனிமொழி எம்.பி.

ஆளுநர் உரையை விமர்சிப்பதைவிட முதல்வரின் செயல்களைப் பாராட்டலாமே: கனிமொழி எம்.பி.
Updated on
2 min read

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள தாப்பாத்தி அகதிகள் முகாமில் கனிமொழி எம்.பி. ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர், ஆளுநர் உரையை விமர்சிப்பதைவிட முதல்வரின் செயல்களைப் பாராட்டலாமே என்று கூறினார்.

எட்டயபுரம் அருகே தாப்பாத்தி இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இவர்களுக்கு இன்று கரோனா ஊரடங்கு கால நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

கனிமொழி எம்.பி. தனது சொந்த நிதியில் இருந்து, முகாமில் உள்ள 382 குடும்பங்களுக்கு கரோனா கால நிவாரணமாக 15 வகையான மளிகைப் பொருட்களை வழங்கினார்.

பின்னர் முகாமைச் சுற்றி ஆய்வு செய்தார். அங்கு ரூ.12 லட்சம் மதிப்பில் நடைபெறும் ரேஷன் கடை கட்டுமான பணிகளை பார்வையிட்டா. தொடர்ந்து அங்குள்ள மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

அப்போது, தங்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும். தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தர வேண்டும். மருத்துவம், வேளாண் படிப்புகளில் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

முகாமில், கர்ப்பிணிப் பெண்கள் 35 பேருக்கு மருத்துவப் பெட்டகங்களை வழங்கினார்.

மேலும், முகாமில் சுகாதார வளாகம் அமைக்க வேண்டும். பசுமை வீடு திட்டத்தில் வீடு வழங்க வேண்டும். இங்குள்ள வீடுகள் பழமையாகி விட்டன. இதனை புதுப்பிக்க வேண்டும். அங்கன்வாடி மையம், விளையாட்டு மைதானம், சுகாதார வளாகம் அமைக்க வேண்டும். குடிநீர், பதிவு இல்லாதவர்களுக்கு புதிதாக பதிவு செய்வது, தாழ்வாக மற்றும் பழுதடைந்த மின்வயர்களை சரி செய்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். மேலும், கனிமொழி எம்.பி.யிடம் கோரிக்கை மனுக்களையும் வழங்கினர்.

தொடர்ந்து, எட்டயபுரம் அருகே குளத்துள்வாய்பட்டியில் உள்ள முகாமில் உள்ள 38 குடும்பங்களுக்கும் நிவாரணப் பொருட்கள் அதிகாரிகள் மூலம் வழங்கப்பட்டன.

முன்னதாக கோவில்பட்டி வட்டம் மூடுக்குமீண்டான்பட்டியில் உள்ள ஆக்டிவ் மைன்ட்ஸ் ஆதரவற்றோர் மனநல காப்பகத்தில் உள்ளவர்களுக்கு சிறப்பு கரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. முகாமை கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்து, அங்கிருந்து மாற்றுத்திறனாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்டதும், தேர்தலின்போது மக்கள் அளித்த வாக்குறுதிகள் ஒவ்வொன்றாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றிக் கொண்டு வருகிறார். இது அனைவரும் அறிந்து விஷயம். ஆளுநர் உரையில் எல்லாமே இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதை விட, அதை செய்து கொண்டிருப்பதைப் பாராட்ட வேண்டும்.

இந்து அறநிலையத்துறை தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. அரசின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளதை மட்டுமே, அரசு நேரடியாக தலையிட்டு செய்ய முடியும். மற்ற இடங்களில் பிரச்சினைகள் இருந்தால் நிச்சயமாக அதனையும் சரி செய்ய அரசு முன் வரும் என்றார் அவர்.

நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், பயிற்சி ஆட்சியர் ஸ்ருத்தஞ் ஜெய் நாராயணன், கோட்டாட்சியர் சங்கர நாராயணன், வட்டாட்சியர்கள் அமுதா, அய்யப்பன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலசுப்பிரமணியன், சீனிவாசன், சுகாதார பணிகள் துணை இயக்குநர் மருத்துவர் அனிதா, ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் கஸ்தூரி, மாநில திமுக பொதுக்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன், நகர திமுக செயலாளர் கருணாநிதி, ஒன்றிய செயலாளர்கள் பீக்கிலிபட்டி முருகேசன், மும்மூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in