Published : 22 Jun 2021 03:19 PM
Last Updated : 22 Jun 2021 03:19 PM

ஆளுநர் உரை திமுகவின் ஒப்பனை செய்யப்பட்ட பொய் மூட்டை: எல்.முருகன் விமர்சனம்

எல்.முருகன்: கோப்புப்படம்

சென்னை

ஆளுநர் உரை, திமுகவின் ஒப்பனை செய்யப்பட்ட பொய் மூட்டை பிரகடனம் என, தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக, எல்.முருகன் இன்று (ஜூன் 22) வெளியிட்ட அறிக்கை:

"புதிய அரசு அமைந்த பிறகு முதன் முறையாக தமிழக ஆளுநர் நிகழ்த்திய உரை, பெருத்த ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது. இவ்வுரையானது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை பாராட்டுவதை மட்டுமே, ஒட்டுமொத்த நோக்கமாக கொண்டுள்ளது.

சாத்தியமே இல்லை என்பது அப்பட்டமாக தெரிந்திருந்தும், மாணவர்களையும், பெற்றோரையும் ஏமாற்றும் நோக்கில் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று, திமுக தேர்தலுக்கு முன்பு வாக்குறுதி அளித்தது. ஆனால், இப்போது ஆளுநர் உரையில் நீட் தேர்வு ரத்து பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. இது மிகப்பெரிய ஏமாற்று வேலை.

பெட்ரோல் விலையை லிட்டருக்கு 5 ரூபாய் குறைப்போம் என்றும், டீசல் விலையை லிட்டருக்கு 4 ரூபாய் குறைப்போம் என்றும், கேஸ் சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம் வழங்கப்படும் என்றும், திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்து மக்களை ஏமாற்றினார்கள். ஆனால், ஆளுநர் உரையில் இதுபற்றி வாயே திறக்கவில்லை.

ஏழைத் தாய்மார்களுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படும் என்று திமுக தேர்தல் வாக்குறுதியில் அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், ஆளுநர் உரையில் அதுபற்றி பேச்சு, மூச்சே இல்லை. இது ஏழை தாய்மார்களை ஏமாற்றி ஓட்டு வாங்குவதற்காகவே நடத்தப்பட்ட நாடகம் என்பது ஊர்ஜிதமாகி உள்ளது.

ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படும் என்று, திமுக தேர்தல் வாக்குறுதியில் அறிவித்துவிட்டு, இப்போது ஆளுநர் உரையில் அது பற்றி எதுவும் குறிப்பிடாமல் இருப்பது. ஒட்டுமொத்த ஆசிரியர் சமுதாயத்தையும் ஏமாற்றுகின்ற செயலாகும். இது வருந்தத்தக்கது.

மீனவர்களுக்கு 2 லட்சம் வீடுகள் கட்டித்தரப்படும் என்று திமுக தேர்தல் வாக்குறுதியில் அறிவித்து இருந்தார்கள். ஆனால், இப்போது அது பற்றி ஆளுநர் உரையில் எதுவும் குறிப்பிடாமல் இருப்பது, ஓட்டுக்காக மீனவ சமுதாய மக்களையும் திமுக வஞ்சித்துவிட்டது என்பது வெட்ட வெளிச்சமாகிவிட்டது.

சுய உதவி குழுக்களின் கூட்டுறவு சங்க கடன், வங்கிகளில் அவர்கள் வாங்கிய கடன் ஆகியவை தள்ளுபடி செய்யப்படும் என்று, திமுக தேர்தல் வாக்குறுதியில் அறிவித்துவிட்டு, இப்போது ஆளுநர் உரையில் அதுபற்றி எதுவும் குறிப்பிடாமல் இருப்பது. ஒட்டுமொத்த தமிழக தாய்மார்களையும் ஏமாற்றுகின்ற செயலாக அமைந்துள்ளது.

இதுபோல நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றும் அறிவித்திருந்தார்கள். அதை நம்பிய மக்களையும் இப்போது ஏமாற்றி விட்டார்கள்.

தமிழகத்தில் மாநகர எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள சுங்கச்சாவடிகள் நீக்கப்படும் என்று திமுக தனது தேர்தல் வாக்குறுதியில் அறிவித்து இருந்தது. அதுபற்றியும் ஆளுநர் உரையில் எதுவும் குறிப்பிடாமல் இருப்பது வேதனை அளிக்கிறது.

தேர்தலுக்கு முன்பு டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று திமுகவினர் மக்களிடம் சொல்லி வாக்குறுதி அளித்து ஓட்டு கேட்டார்கள். ஆனால், இப்போது டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்பது பற்றி ஆளுநர் உரையில் எந்த அறிவிப்பும் வெளிவராதது மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாதம் ஒருமுறை மின் கணக்கீடு மேற்கொள்ளப்படும் என்று திமுக தேர்தல் வாக்குறுதியில் அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், ஆளுநர் உரையில் அதுபற்றி எதுவும் குறிப்பிடப்படாததும் ஏமாற்றம் அளிக்கிறது.

திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு சிமெண்ட் விலை, மூட்டைக்கு 370 ரூபாயாக இருந்தது. அது ஒரே இரவில் 520 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இது மிகப்பெரிய பகல் கொள்ளை. செங்கல், ஜல்லி, மணல், கம்பி உள்பட அனைத்து கட்டுமான பொருட்கள் விலையும் ராக்கெட் வேகத்தில் உயர்ந்துள்ளது. சமையல் எண்ணெய் முதல் அனைத்து பொருட்களின் விலையும் தாறுமாறாக உயர்ந்துள்ளது. இந்த விலைவாசி ஏற்றத்தைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக, ஆளுநர் உரையில் எந்த அறிவிப்பும் வெளியிடாதது மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்துகிறது.

கரோனா பெருந்தொற்று காரணமாக அனைத்து சிறு, குறு தொழில்களும் முடங்கிப்போயுள்ளன. அந்த தொழிற்சாலைகளுக்கு புத்துயிர் ஊட்டும் வகையில் ஆக்கபூர்வமான எந்த அறிவிப்பையும் ஆளுநர் உரையில் வெளியிடவில்லை.

அதேபோல, வேலைவாய்ப்பை இழந்து நிற்கதியாய் நிற்கும் தொழிலாளர்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் வகையில் எந்த திட்டங்களையும் ஆளுநர் உரையில் அறிவிக்கவில்லை. இது மிகுந்த ஏமாற்றத்தையும், மன வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.

கோதாவரி - காவிரி இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற மோடி அரசு விரிவான அறிக்கையை தயார் செய்து அந்தந்த மாநிலங்களுக்கு அனுப்பி உள்ளது. அந்தத் திட்டம் பற்றி ஆளுநர் உரையில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. மோடி அரசுக்கு நற்பெயர் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக, அந்தத் திட்டம் ஆளுநர் உரையில் இருட்டடிப்பு செய்யப்பட்டதோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. மேலும், விவசாயிகளுக்கு பயனளிக்கக்கூடிய வகையில் அமைந்துள்ள இந்தத் திட்டத்தை திமுக அரசு புறக்கணிக்கிறதோ என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது.

ஒருவேளை இந்த திட்டம் புறக்கணிக்கப்ப்படுமானால், இது தமிழக விவசாயிகளுக்கு திமுக அரசு இழைக்கின்ற மிகப்பெரிய கேடு ஆகும்.

மொத்தத்தில் ஆளுநர் உரை, திமுகவின் ஒப்பனை செய்யப்பட்ட பொய் மூட்டை பிரகடனம் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை".

இவ்வாறு எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x