

டெல்டா மாவட்டங்கள் உட்பட ஒரு சில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் இன்று (ஜூன் 22) வெளியிட்ட அறிக்கை:
"வெப்பச்சலனத்தின் காரணமாக தமிழ்நாட்டில்,
22.06.2021: அரியலூர், பெரம்பலூர், கடலூர், தேனி, திண்டுக்கல் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
23.06.2021: நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
24.06.2021 முதல் 26.04.2021வரை: மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய (நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி) மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், கடலோர மாவட்டங்கள், உள் மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.
சென்னையை பொறுத்தவரை
அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 38 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.
கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்ச மழை அளவு (சென்டிமீட்டரில்):
செய்யூர் (செங்கல்பட்டு), வளவனூர் (விழுப்புரம்) தலா 7, திருக்கோயிலூர் (கள்ளக்குறிச்சி), வீரபாண்டி (தேனி), பரங்கிப்பேட்டை (கடலூர்) தலா 4, மணல்மேடு (மயிலாடுதுறை), ஏரையூர் (பெரம்பலூர்) தலா 3, செந்துறை (அரியலூர்), அவலாஞ்சி (நீலகிரி), புதுச்சேரி, திருத்துறைப்பூண்டி (திருவாரூர்), வடபுதுப்பட்டு (திருப்பத்தூர்) தலா 2, தண்டராம்பேட்டை (திருவண்ணாமலை), அம்மூண்டி (வேலூர்), சோலையாறு (கோவை), வேதாரண்யம் (நாகை), சேந்தமங்கலம் (நாமக்கல்), கொடைக்கானல் தலா 1.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
22.06.2021 முதல் 26.06.2021 வரை: தென்மேற்கு மற்றும் மத்திய அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ வரையும் அவ்வப்போது 60 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும்.
மீனவர்கள் மேற்குறிப்பிட்ட தேதிகளில் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்".
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.