Published : 22 Jun 2021 12:55 PM
Last Updated : 22 Jun 2021 12:55 PM

மதுரையில் தேசிய மருந்துசார் கல்வி மற்றும் ஆராய்ச்சிக் கழகம் அமைக்க வேண்டும்: மத்திய அமைச்சரிடம் கோரிக்கை வைத்த எம்.பி.க்கள் 

மத்திய அமைச்சரைச் சந்தித்த எம்.பி.க்கள் சு.வெங்கடேசன், மாணிக்கம் தாகூர்.

புதுடெல்லி

எம்.பி.க்கள் சு.வெங்கடேசன், ப. மாணிக்கம் தாகூர் இருவரும் மத்திய உரம் மற்றும் ரசாயனத்துறை அமைச்சர் சதானந்த கவுடாவைச் சந்தித்தனர். அப்போது, மதுரையில் தேசிய மருந்துசார் கல்வி மற்றும் ஆராய்ச்சிக் கழகம் அமைக்க கோரிக்கை வைத்தனர்.

இது தொடர்பாக, இரு எம்.பி.க்கள் இன்று (ஜூன் 22) வெளியிட்ட கூட்டறிக்கை:

"வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக் கூட்டணி அரசால் 1998இல் இயற்றப்பட்ட சட்டத்தின் படி, தேசிய மருந்துசார் கல்வி மற்றும் ஆராய்ச்சிக் கழகம் (NIPER) ஒரு தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனமாகும்.

மருந்துசார் அறிவியலில் மேம்பட்ட படிப்புகள் மற்றும் ஆராய்ச்சிக்காக ஒரு சிறப்பு மையத்தை உருவாக்கும் நோக்கத்துடன் மருந்துசார் அறிவியலில் முதல் தேசிய அளவிலான கழகமாக உருவாக்கப்பட்டதுதான் தேசிய மருந்துசார் கல்வி மற்றும் ஆராய்ச்சிக் கழகம் (NIPPER).

இந்திய அரசு, தேசிய மருந்துசார் கல்வி மற்றும் ஆராய்ச்சிக் கழகத்தை ஒரு 'தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனமாக' பிரகடனப்படுத்தியுள்ளது. இது, இந்திய அரசின் ரசாயனங்கள் மற்றும் உரங்கள் அமைச்சகத்தின் கீழ் உள்ள மருந்துசார் துறையின் கீழ் அமைக்கப்பட்டுள்ள ஒரு தன்னாட்சி அமைப்பாகும்.

இது இந்தியத் தொழில்நுட்பக் கழகத்திற்குச் சமமான அந்தஸ்தைக் கொண்டதாகும். மருந்துசார் அறிவியலில் கல்வி மற்றும் ஆராய்ச்சியில் உலக அளவில் அங்கீகரிக்கப்பட்ட தர அடையாளத்துடன் உருவாக்கும் ஒரு பார்வையுடனும், மருந்துசார் தொழில் வளர்ச்சிக்காகவும், இந்திய மக்களின் நலனுக்காகவும் ஒரு தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனமாக தேசிய மருந்துசார் கல்வி மற்றும் ஆராய்ச்சிக் கழகத்தை உருவாக்குவது கட்டாயமாகும்.

தற்போது நாடு முழுவதும் 7 தேசிய மருந்துசார் கல்வி மற்றும் ஆராய்ச்சிக் கழகங்கள் உள்ளன. முதல் கழகம் 1998இல் உருவாக்கப்பட்டது. அதன் பிறகு, மற்ற 6 கழகங்கள் 2007-லிருந்து 2008 காலத்தில் அகமதாபாத், கௌஹாத்தி, ஹைதராபாத், ஹாஜிபூர் (பிஹார்), கொல்கத்தா மற்றும் லக்னோ ஆகிய இடங்களில் தொடங்கப்பட்டன.

ஜனவரி 20, 2011 அன்று நடைபெற்ற எட்டாவது நிதி ஆணையத்தின் கூட்டத்தில், இதர 5 கழகங்களுடன் மதுரையில் ஒரு தேசிய மருந்துசார் கல்வி மற்றும் ஆராய்ச்சிக் கழகத்தை உருவாக்கப் பரிந்துரை செய்யப்பட்டது.

செப்டம்பர் 13, 2011இல் நடைபெற்ற மத்திய அரசின் அமைச்சரவைக் கூட்டத்தில் மேற்கூறிய கழகங்களை அமைப்பதற்கான முன்மொழிவுகளுக்கு ஒப்புதல் வழங்கியது.

எட்டாவது நிதி ஆணையம் வழங்கிய செல்லுபடியாகும் நீட்டிப்பை செலவினங்கள் துறை ஜூன் 13, 2016 தேதியிட்ட அலுவலகக் குறிப்பாணையில் ஒப்புதல் அளித்துள்ளது.

மார்ச் 26, 2018 அன்று நடைபெற்ற எட்டாவது நிதி ஆணையத்தின் கூட்டத்தில் மதுரை உள்ளிட்ட இடங்களில் புதிய தேசிய மருந்துசார் கல்வி மற்றும் ஆராய்ச்சிக் கழகங்கள் அமைப்பது பற்றி மறு ஆய்வு செய்யப்பட்டது.

எட்டாவது நிதி ஆணையத்தின் காலமான 2020-25இல் தேசிய மருந்துசார் கல்வி மற்றும் ஆராய்ச்சிக் கழகத்தை மதுரையில் தொடங்க முடிவு செய்யப்பட்டது. தற்போது தென்னிந்தியாவில் இதுபோன்ற முதன்மையான ஆராய்ச்சிக் கழகம் இல்லாத நிலையில் மதுரையில் தேசிய மருந்துசார் கல்வி மற்றும் ஆராய்ச்சிக் கழகத்தைத் தொடங்குவது பொதுவாக இந்தியாவுக்கும், குறிப்பாக தென்னிந்தியாவுக்கும் உதவிடும்.

தமிழக அரசு மதுரையில் தேசிய மருந்துசார் கல்வி மற்றும் ஆராய்ச்சிக் கழகம் அமைப்பதற்கென 116 ஏக்கர் நிலத்தை இலவசமாக ஏற்கெனவே வழங்கியுள்ளது.

மதுரையில் தேசிய மருந்துசார் கல்வி மற்றும் ஆராய்ச்சிக் கழகம் மாணவர் சேர்க்கையினைத் தொடங்கும் வகையில், மத்திய உரம் மற்றும் ரசாயனத்துறை அமைச்சகம் முடிவெடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம்.

மாணவர் சேர்க்கை தொடங்கினால், பயிற்றுவிப்பதற்கான தற்காலிகக் கட்டிடங்களை நாங்கள் பெற்றுத்தருகிறோம் என்றும் கூறினோம்.

இதுகுறித்து, மத்திய அமைச்சர் சதானந்த கவுடா, இன்றே துறை அதிகாரிகளிடம் கலந்தாலோசித்து, நாளை எங்களிடம் தொலைபேசியில் பேசுவதாகவும், தொடர்ந்து துறை அதிகாரிகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தைக் கூட்டுவதாகவும் கூறினார்".

இவ்வாறு எம்.பி.க்கள் சு.வெங்கடேசன், ப. மாணிக்கம் தாகூர் ஆகிய இருவரும் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x