Published : 22 Jun 2021 12:05 PM
Last Updated : 22 Jun 2021 12:05 PM

சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதம்

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்: கோப்புப்படம்

சென்னை

தமிழக சட்டப்பேரவையில் இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் இன்று தொடங்கியது.

16-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர் நேற்று (ஜூன் 21) தொடங்கியது. இதில், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றினார். அதைத் தொடர்ந்து, சபாநாயகர் மு.அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெற்றது. முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி மற்றும் பல்வேறு கட்சிகளின் சட்டப்பேரவை குழு தலைவர்கள் பங்கேற்றனர்.

கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் சபாநாயகர் அப்பாவு கூறுகையில், "ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் ஜூன் 22-ம் தேதி (இன்று) தொடங்குகிறது. 22, 23-ம் தேதிகளில் அனைத்து கட்சிகளின் தலைவர்களும் பேசி முடித்த பிறகு, 24-ம் தேதி விவாதத்துக்கு பதில் அளித்து முதல்வர் உரையாற்றுவார்.

இன்று அவை தொடங்கியதும், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர்களுக்கு மறைவுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்படும்.

நடிகர் விவேக், எழுத்தாளர் கி.ராஜநாராயணன், சுதந்திர போராட்ட வீரர் துளசி அய்யா வாண்டையார், இந்திய அரசியல் நிர்ணய சபை உறுப்பினர் காளியண்ணன் கவுண்டர் மறைவு குறித்தும், இரங்கல் தீர்மானங்கள் நிறைவேற்றப்படும். இந்த கூட்டத்தொடரில், கேள்வி நேரம், கவன ஈர்ப்புத் தீர்மானங்கள் தொடர்பான நிகழ்வுகள் இடம் பெறாது. சட்ட முன்வடிவுகள் இருக்க வாய்ப்புள்ளது" என தெரிவித்தார்.

இதன்படி, இன்று அவை தொடங்கியது. இதில், முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி மற்றும் பல்வேறு கட்சிகளின் சட்டப்பேரவை குழு தலைவர்கள், எம்எல்ஏக்கள் பங்கேற்றனர்.

முதலாவதாக, மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு சபாநாயகர் அப்பாவு இரங்கல் குறிப்பு வாசித்தார். மேலும், நடிகர் விவேக், எழுத்தாளர் கி.ராஜநாராயணன், சுதந்திர போராட்ட வீரர் துளசி அய்யா வாண்டையார், இந்திய அரசியல் நிர்ணய சபை உறுப்பினர் காளியண்ணன் கவுண்டர் ஆகியோர் மறைவு குறித்து இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அண்ணா பல்கலை. முன்னாள் துணைவேந்தர் அனந்த கிருஷ்ணன் மறைவுக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. மேலும், அனைவரும் 2 நிமிடம் மவுன அஞ்சலியும் செலுத்தினர்.

இதையடுத்து, தமிழ்நாடு நிதிநிலை நிர்வாகத்தின் பொறுப்புடமை சட்ட முன்வடிவை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிமுகப்படுத்தினார். இதைத்தொடர்ந்து, சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் குறித்து திமுக எம்எல்ஏ உதயசூரியன் பேசினார்.

கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட நலத்திட்டங்கள் குறித்தும், தற்போது வேளாண்மைக்கு தனிநிதிநிலை அறிக்கை ஆகியவை குறித்தும் அவர் பேசினார். முந்தைய ஆட்சிக்காலத்தில் நலத்திட்டங்களை செயல்படுத்தாமல், ஊரடங்கை சரியாக நடைமுறைப்படுத்தவில்லை எனக்கூறிய அவர், இந்த ஆட்சியில் சொன்னபடியே ரூ.4,000 நிவாரணம் வழங்கி ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதையடுத்து பேசிய அதிமுக எம்எல்ஏ விஜயபாஸ்கர், திமுக ஆட்சி எப்படி செயல்படுகிறது, பொது போக்குவரத்து தொடங்கியுள்ள நிலையில் அரசு இன்னும் கவனமாக இருக்க வேண்டும் என பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x