Published : 22 Jun 2021 03:11 AM
Last Updated : 22 Jun 2021 03:11 AM

கோயில் நிலங்களை அளக்கும் பணியில் அறநிலையத் துறையினர் தீவிரம்

வருவாய்த் துறையுடன் இணைந்து கோயில் நிலங்களை அளக்கும் பணியில் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் 36 ஆயிரத்துக்கும் மேற்பட்டகோயில்கள் உள்ளன. இக்கோயில்களுக்கு சொந்தமாக 4.75 லட்சம்ஏக்கர் நிலங்கள் உள்ளன. இவற்றில் ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்கும் பணியை அறநிலையத் துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

வருவாய் துறையுடன் இணைந்து

இந்நிலையில், கோயில் நிலங்களை அளந்து அறிக்கையாக தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, வருவாய்த் துறையுடன் இணைந்து கோயில் நிலங்களை அளக்கும் பணியில் இந்து சமய அறநிலையத் துறைஅதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை அமைந்தகரையில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான நிலங்களை அளக்கும் பணியை வருவாய்த் துறை அதிகாரிகள் நேற்று தொடங்கினர். அறநிலையத் துறை அதிகாரிகளும் உடன் இருந்தனர். இதுகுறித்து அறநிலையத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

கோயில்களுக்கு சொந்தமான நிலங்களை வருவாய்த் துறை அதிகாரிகள் உதவியுடன் அளக்கும்பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சென்னை மதுரவாயல் மார்க்கசகாய ஈஸ்வரர் கோயில் நிலம் சில நாட்களுக்கு முன்பு அளக்கப்பட்டது. கோயம்பேடு குறுங்காலீஸ்வரர் கோயில் நிலங்கள் வரும் 24-ம் தேதி அளக்கப்பட உள்ளது.

இதன்மூலம் அறநிலையத் துறைக்கு சொந்தமான நிலங்கள் தனியார் கட்டுப்பாட்டில் இருந்தால் மீட்கப்படும். ஆக்கிரமிப்பாளர்களை அடையாளம் கண்டு அகற்றமுடியும். அதற்கு ஏதுவாக, வருவாய்த் துறை அதிகாரிகளுடன் இணைந்து நிலங்களை அளக்கும் பணியை தீவிரமாக மேற்கொண்டு வருகிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x