

தமிழக செய்தித் துறை அமைச்சரும், திருப்பூர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான மு.பெ.சாமிநாதன் - உமாதேவி தம்பதியின் மகள் சா.சிவசம்யுக்தாவுக்கும், கோவை ஜெயக்குமார்-காந்திமதி தம்பதியின் மகன் ராகுல் ப்ரீத்விக்கும் திருப்பூர் காங்கயம் சாலையில் அமைந்துள்ள மணி மஹாலில் நேற்று திருமணம் நடைபெற்றது. திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் வாழ்த்துச் செய்தி அனுப்பியிருந்தார்.
முன்னதாக, நேற்று முன்தினம் மாலை நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், முதல்வர்மு.க.ஸ்டாலினின் துணைவியார் துர்கா ஸ்டாலின், திமுக இளைஞரணி மாநில செயலாளரும், சேப்பாக்கம் சட்டப்பேரவைத் தொகுதிஉறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். துர்கா ஸ்டாலின் மணமக்களிடம் மாலை எடுத்து கொடுக்க,மணமக்கள் மாலை மாற்றிக் கொண்டனர்.
நிகழ்ச்சியில், திமுக சொத்து பாதுகாப்புக் குழு துணைத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான பொங்கலூர் நா.பழனிச்சாமி, திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் இல.பத்மநாபன் உள்ளிட்ட நிர்வாகிகள், உறவினர்கள் அனைவரும் சமூக இடைவெளியுடன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.