Published : 22 Jun 2021 03:12 AM
Last Updated : 22 Jun 2021 03:12 AM

திருப்பூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் அடிப்படையில் வாக்குச்சாவடி மையங்களில் தடுப்பூசி போடும் பணி தொடக்கம்

திருப்பூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல்படி, சுழற்சி முறையில் டோக்கன் வழங்கப்பட்டு, தடுப்பூசிபோடும் பணி நேற்று தொடங்கியது.

திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்காக அதிக அளவில் மக்கள் கூடுவதைத் தவிர்க்கும் வகையில், வாக்காளர் பட்டியல் அடிப்படையில் சுழற்சி முறையில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் டோக்கன் கொடுக்கப்பட்டு, மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும், தடுப்பூசி முகாம் நடக்கும் இடங்கள் பற்றிய விவரம், அந்தந்த உள்ளாட்சி நிர்வாகத்தின் மூலம் ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு தெரியப்படுத்தப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது.

அதன்படி, பல்வேறு வாக்குச்சாவடி மையங்களில், வாக்காளர் பட்டியல் அடிப்படையில் பொதுமக்களுக்கு நேற்று தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இதனைக் கண்காணிக்கும் வகையில், சுகாதாரத் துறை அலுவலர்களோடு இணைந்து, ஒவ்வொரு மையத்துக்கும் வருவாய்த் துறை அதிகாரிகளும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

புலம்பெயர் தொழிலாளர்கள்?

திருப்பூர் இடுவம்பாளையம் அரசுப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த தடுப்பூசி மையத்தில் அதிகாலை முதலே ஏராளமானோர் காத்திருந்தனர். வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் டோக்கன் விநியோகம் செய்யப்பட்டதால், அதில் பெயர் இல்லாதவர்கள் ஏமாற்றமடைந்தனர். இதுதொடர்பாக தொழிலாளர்கள் சிலர் கூறும்போது ‘‘திருப்பூர் போன்ற தொழிலாளர்கள் நிறைந்த பகுதியில், வாக்காளர் பட்டியல் அடிப்படையில் தடுப்பூசி போடுகிறார்கள். ஆனால், வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாத எங்களைப் போன்ற வடமாநிலத் தொழிலாளர்கள், வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என அனைவரும் பாதிக்கப்படுவோம். வாக்காளர் பட்டியலில்பெயர் இல்லாத புலம்பெயர்ந்ததொழிலாளர்களுக்கும், தடுப்பூசிபோட ஏற்பாடு செய்ய வேண்டும்’’ என்றனர்.

இதுதொடர்பாக, மார்க்சிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டச்செயலாளர் செ.முத்துக்கண்ணன் கூறும்போது ‘‘ வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெறாதவர்கள் மற்றும் வடமாநிலத் தொழிலாளர்களுக்கும் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x