

ஜவளகிரி வனச்சரகத்தில் யானை தாக்கி உயிரிழந்தவர் குடும்பத் துக்கு மாவட்ட வனத்துறை சார்பில் முதல் கட்டமாக ரூ.50 ஆயிரத்துக்கான காசோலை வழங்கப்பட்டது.
ஜவளகிரி வனச்சரகம் மாடக்கல் ஊராட்சி உளிபெண்டா கிரா மத்தைச் சேர்ந்தவர் குண்டப்பா (63). இவர் நேற்று முன்தினம் இரவு தக்காளி தோட்டத்துக்கு காவல் பணிக்கு சென்றுள்ளார். அப்போது அருகில் உள்ள காப்புக்காட்டில் இருந்து ஒற்றை யானை வெளிப்பட்டது. இதை கவனித்த குண்டப்பா, யானையிடம் இருந்து தப்பிக்க வேகமாக ஓடியபோது கால் இடறி கீழே விழுந்தவரை யானை தாக்கியது. படுகாயமடைந்த குண்டப்பா அந்த இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
வீடு திரும்பாத குண்டப்பாவை நேற்று காலை உறவினர்கள் தேடிச் சென்றபோது அவர் யானை தாக்கி உயிரிழந்துள்ளது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்து சென்ற வனத்துறையினர் குண்டப்பாவின் உடலை மீட்டு பிரேத பரிசோ தனைக்கு தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குண்டப்பாவின் மனைவி வெங்கடம்மாவிடம் முதல் கட்டமாக ரூ.50 ஆயிரத்துக்கான காசோலையை உதவி வன பாதுகாவலர் கார்த்திகேயிணி வழங்கினார்.
அப்போது ஜவளகிரி வனச்சரகர் முருகேசன், தேன்கனிக்கோட்டை வனச்சரகர் சுகுமார், தேன்கனிக்கோட்டை டிஎஸ்பி கிருத்திகா ஆகியோர் உடனிருந்தனர்.