

திருத்தணி அடுத்த சூர்யநகரம் கிராமத்தில் ஏரி உடைந்து வெள்ளம் ஊருக்குள் புகுந்தது. இதில், 13 ஆடுகள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டன.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே உள்ளது சூர்ய நகரம். இங்குள்ள பெரிய ஏரி சமீபத்தில் பெய்த கனமழையால் நிரம்பி கடல் போல் காட்சியளித்தது. இந்நிலையில், நேற்று அதிகாலை 3 மணிக்கு சூர்ய நகரம் பெரிய ஏரியின் மதகில் மண் அரிப்பு ஏற்பட்டு திடீரென உடைந்தது. அப்பகுதியில் உள்ள 100-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால், வீடுகளுக்குள் உறங்கிக் கொண்டிருந்த மக்கள் திடீரென வெள்ளம் புகுந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
தகவல் அறிந்த வந்த போலீஸார் மற்றும் பொதுப் பணித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மக்களை மீட்டு அரசுப் பள்ளியில் தங்க வைத்தனர். பின்னர் பொதுப்பணித் துறை ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் சேர்ந்து மணல் மூட்டைகளை அடுக்கி மதகின் அருகே ஏற்பட்ட உடைப்பை அடைத்தனர். இந்த திடீர் வெள்ளத்தால் வீடுகளின் முன்பு கட்டப்பட்டு இருந்த 13 ஆடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.