

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில்பொக்கிஷ அறையில் கடந்த 6 மாதங்களுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்ட 16 சிலைகள் குறித்து தொல்லியல் துறை ஆய்வு செய்ய வேண்டும் என்று கோயில் நிர்வாகம் கடிதம் எழுதியும், இதுவரை ஆய்வு மேற்கொள்ளப்படவில்லை. இது தொடர்பாக விரைந்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தினர்.
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் கடந்த டிசம்பர் மாதம் கோயில் நகைகள் சரிபார்ப்பு பணிகள் நடைபெற்றன. அப்போது கோயில் பொக்கிஷ அறையைத் திறந்து அதில் இருந்த நகைகள் எடுக்கப்பட்டன. பல ஆண்டுகளாக இந்த பொக்கிஷ அறை திறக்கப்படாமல் இருந்தது. அப்போது அந்தஅறைக்குள் 16 சிலைகள் இருந்தன. இந்த சிலைகள் கோயில் ஆவணங்களில் பதிவு செய்யப்படாமல் இருந்தன.
இதுகுறித்து அறநிலையத் துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, “கோயிலில் கண்டெடுக்கப்பட்ட சிலைகள் பழங்கால சிலைகள் போல் உள்ளன. சிலை கிடைத்த விவரங்கள் பதிவு செய்யப்பட்டு, அது அறநிலையத் துறை அதிகாரிகளுக்கு முறைப்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சிலைகளில் தங்கம் கலந்து உள்ளதா? இவை விலை உயர்ந்த பஞ்சலோக சிலைகளா?, சாதாரண சிலைகளா? எந்தகாலத்தைச் சேர்ந்தவை என்பது குறித்து தெரிந்து கொண்டு அதன்விவரங்களுடன் கோயில் பதிவேடுகளில் சிலை குறித்த விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.
இதனால் கோயில் சார்பில் தொல்லியல் துறைக்கு சிலைகளை ஆய்வு செய்ய கடிதம் அனுப்பினர். கடிதம் அனுப்பி பல மாதங்கள் ஆன நிலையில் இன்னும் கோயில் சிலைகள் குறித்து இதுவரை ஆய்வு நடைபெறவில்லை. இந்தச்சூழ்நிலையில் கோயில் சார்பில் 2-வது நினைவூட்டல் கடிதமும் தொல்லியல் துறைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. உடனடியாக தொல்லியல் துறை ஆய்வு நடத்தினால் இதை கோயில் பதிவேடுகளில் முழுமையான விவரங்களுடன் பதிய முடியும்’’ என்றார்.
பல ஆண்டுகளாக பூட்டப்படிருந்த பொக்கிஷ அறையில் இந்த 16 சிலைகள் இருந்ததால் இவை விலை உயர்ந்த சிலைகளாக இருக்கலாம் என்று பக்தர்களால் நம்பப்படுகிறது. எனவே, இதுகுறித்து தொல்லியல் துறை உடனடியாக ஆய்வு மேற்கொள்ள வேண்டும். இந்த ஆய்வு மேற்கொண்ட உடன் கோயில் நிர்வாகம் இந்த சிலைகள் குறித்த முழுமையான விவரங்களுடன் பதிவேடுகளில் பதிய வேண்டும் என்றும்கோயில் பக்தர்கள், சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.