

கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டங்களிலும் வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) நிகழ்ச்சி நேற்று முதல் ஆன்லைன் மூலம் தொடங்கியிருக்கிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டத் திற்கான ஜமாபந்தியை கள்ளக் குறிச்சியில் ஆட்சியர் பி.என்.தர் ஆன்லைன் மூலம் நேற்று தொடங்கி வைத்தார்.
தற்போது கரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளதால் பொதுமக்கள் தங்களதுகோரிக்கை மனுக்களை பெறப் படுவது தவிர்க்கப்பட்டுள்ளதால், இம்மாதம் 10-ம் தேதி முதல் ஜூலை 31-ம் தேதி வரை இணையதளம் மற்றும் இ-சேவை மையங்கள் மூலமாக மட்டுமே மனுக்கள் அனுப்ப வேண்டும்.
ஆகையால் பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை அளிக்க வட்டாட்சியர் அலுவல கங்களுக்கு நேரில் வர வேண்டாம் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
அதன்படி நேற்று தொடங்கிய ஜமாபந்தியில் கள்ளக்குறிச்சி வட்டத்தில் 7 பேர் மட்டுமே ஆன்லைன் மூலம் மனு அளித்திருந்தனர்.
கடந்த 11 நாட்களில் இதுவரை 50 மனுக்கள் மட்டுமே வரப்பெற்றுள்ளதாக வருவாய் அலுவலர்கள் தெரிவித்தனர்.
இதேபோன்று கடலூர் மாவட்டத்தில் காட்டுமன்னார் கோவில் வட்டத்தில் 23 மனுக்கள் மட்டுமே வரப்பெற்றுள்ளதாக அங்குள்ள அலுவலர்கள் தெரிவித்தனர்.
பொதுவாக ஜமாபந்தி என்றாலே, மனுக்களுடன் மக்கள்அலை அலையாய் வருவாய் அலுவலகங்கள் நோக்கி படையெடுப்பது வழக்கம். அப்போது ஒவ்வொரு அலுவலகத்திலும் நாளொன்றுக்கு 150 முதல் 200 மனுக்கள் வரை பெறுவோம், ஆனால் தற்போது கரோனா என்பதால், மக்கள் வர தயக்கம் என்பதை விட, ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பது குறித்த போதிய அறியாமையே இதற்கு காரணம் எனத் தெரிவித்த கள்ளக்குறிச்சி வருவாய் அலுவலர்கள், இ-சேவை மையங்களே தற்போது தான் இயங்கத் தொடங்கியிருக்கிறது. எனவே இனிவரும் காலங்களில் அதிக அளவில் மனுக்கள் வரும் என எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தனர்.
மக்கள் தங்களது மனுக்களை கீழ்காணும் மின்னஞ்சல் வாயிலாக அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்வதாகத் தெரிவித்தனர்.
அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு கள்ளக்குறிச்சி-kaltaluk@gmail.com,கல்வராயன் மலை-tahsildarkhills@gmail.com, சின்னசேலம்-chinnasalemtk@gmail.com, உளுந்தூர்பேட்டை-ulutaluk2012@gmail.com, சங்கராபுரம்-ahsildarspm@gmail.com, திருக்கோவிலூர்-tirtaluk.tnvpm@nic.in என்ற இணைய முகவரிகளில் மனுக்களை அனுப்பலாம்.