

கனமழை காரணமாக செம்பரம்பாக்கம், புழல், பூண்டி ஏரிகளிலிருந்து உபரி நீர் திறப்பு செவ்வாய்க்கிழமை காலை முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மதியம் 1.00 மணி நிலவரப்படி, செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு 20,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி செவ்வாய் கிழமை காலை விடுத்த அறிக்கையில், "செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து உபரி நீர் தற்போது வினாடிக்கு 5000 கன அடி வெளியேற்றப்பட்டு வருகிறது. ஏரிக்கு வரும் நீர் வரத்து அதிகரிப்பால் உபரி திறந்துவிடும் அளவு 7,500 கன அடி வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதால், அடையாறு ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
ஆனால், தற்போது 20,000 கன அடி தண்ணீர் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து திறக்கப்பட்டுள்ளது. இதனால் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறத்தப்பட்டுள்ளது.
(மாலை 4 மணி நிலவரப்படி)
பூண்டி நீர்த்தேக்கத்திலிருந்து திறக்கப்படும் உபரி நீரின் அளவு 24,000 கன அடியில் இருந்து 36,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதனால், கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மணலி, புதுநகர், விச்சூர், ஈச்சாங்கோவில் ஆகிய பகுதிவாழ் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
புழல் ஏரியிலிருந்து 5,000 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது
.
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் தெற்கு அந்தமான் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, மேற்கு நோக்கி நகர்ந்து, தற்போது தென்மேற்கு வங்கக்கடலில் நீடிக்கிறது.
இந்நிலையில், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் நேற்று (திங்கள்கிழமை) இரவு முதலே கனமழை பெய்து வருகிறது. இன்று காலை 8.30 மணி நிலவரப்படி அதிகபட்சமாக திருவாரூர் மாவட்டம் குடவாசலில் 12 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
சென்னை நகரின் பல பகுதிகளில் சாலைகளில் மழை நீர் தேங்கியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர். ஆங்காங்கே போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது.
கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு
திருவள்ளூர் மாவட்டத்தில் கொசஸ்தலை ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் பிச்சாட்டூர் அணையிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டுள்ளதால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் வீரராகவன் தெரிவித்துள்ளார்.
மேலும், தாமரைப்பாக்கம், வடகரை உள்ளிட்ட கரையோர பகுதிகளில் வாழும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும், நிவாரண முகாம்கள் தயார் நிலையில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். 22 மீட்புக் குழுக்கள் தயார் நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளப் பெருக்கால் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே உள்ள திருத்தணி தரைப்பாலம் உடைந்தது.