

அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகேயுள்ள கரையான்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன். ஏலாக்குறிச்சியில் வாகனங்களுக்கான வாட்டர் சர்வீஸ் நிலையம் நடத்தி வருகிறார். இவர், தனக்கு சொந்தமான இடத்தில் வீடு கட்டுவதற்காக கடந்த 3 நாட்களாக ஆட்களைக்கொண்டு அஸ்திவாரம் தோண்டி வருகிறார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை ஒரு இடத்தில் 4 அடி ஆழத்துக்கு தோண்டியபோது, கற்சிலை போன்று தென்பட்டது. அப்போது, இருள் சூழ்ந்துவிட்டதால் நேற்று காலை வருவாய்த் துறையினரின் முன்னிலையில் பொக்லைன் உதவியுடன் வெளியே எடுக்கப்பட்ட அந்தச் சிலை, 8 அடி உயரம் கொண்ட கல்லால் ஆன பெருமாள் சிலை என்பது தெரியவந்தது. இதையடுத்து, அப்பகுதி மக் கள் சிலையை சுத்தம் செய்து, மாலையிட்டு தீபாராதனை காட்டி னர்.
பின்னர், அந்தச் சிலை அரியலூர் கோட்டாட்சியர் ஏழுமலை வசம் ஒப்படைக்கப்பட்டது. திருச்சியிலுள்ள அருங்காட்சியகத்துக்கு இந்தச் சிலை அனுப்பப்பட்டு தொல்பொருள் ஆராய்ச்சி துறையினரின் ஆய்வுக்குப் பின்னரே, அது எந்தக் காலத்தைச் சேர்ந்தது என்பது தெரியவரும்.