கரோனா ஊரடங்கால் ஏற்பட்டுள்ள மன அழுத்தத்தில் இருந்து மனதளவில் மாணவர்களுக்கு மாற்றத்தை ஏற்படுத்தும் ஓவியம்

திருவண்ணாமலையில் கரோனா விழிப்புணர்வு ஓவியம் வரையும் மாணவிகள்.
திருவண்ணாமலையில் கரோனா விழிப்புணர்வு ஓவியம் வரையும் மாணவிகள்.
Updated on
2 min read

கரோனா ஊரடங்கால் மாணவர் களுக்கு ஏற்பட்டுள்ள மன அழுத்தத்தை போக்க ‘ஓவிய பயிற்சிக்கு’ பெற்றோர் முக்கி யத்துவம் கொடுத்து வருகின்றனர்.

கரோனா ஊரடங்கு காரணமாக மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டுள்ளதாக கல்வியாளர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்கள் கூறி வருகின்றனர். தொலைக்காட்சி மற்றும் செல்போன்களில் மூழ்கி கிடப்பதே காரணம் என அவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். மாணவர் களின் மன அழுத்தத்தை போக்க கலை, யோகாசனம் மற்றும் விளையாட்டுகளில் ஈடுபடுத்த, பெற்றோர் முன் வர வேண்டும் என அறிவுறுத்தினர்.

கல்வியாளர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களின் கருத்தை உணர்ந்த பெற்றோர், தங்களது பிள்ளைகளின் எண்ணத்தில் மாற்றத்தை ஏற்படுத்த முயன்று வருகின்றனர். அதன்படி, தி.மலையில் வசிக்கும் பெற்றோர், தங்களது பிள்ளைகளுக்கு ‘ஓவியம்’ மூலமாக மாற்றத்தை கொடுக்க களம் இறங்கியுள்ளனர். ஓவியத்தில் நாட்டம் அதிகரித்தால் ‘நிதானம், பொறுமை, கூர்மையான கவனம்’ ஏற்படும் என்ற நம்பிக்கை உள்ளதாக கூறுகின்றனர்.

இதுகுறித்து திருவண்ணாமலை அடுத்த பெரும்பாக்கம் சாலை, இந்திரா நகரில் எஸ்ஆர்வி ஓவிய பயிற்சி பள்ளி நடத்தி வரும் ‘எஸ்ஆர்வி’ வெங்கடேசன் கூறும்போது, “சிறுவர் முதல் முதியோர் வரை என அனைவரது மன அழுத்தத்தை போக்கக் கூடியது ஓவியம். இதனால், கரோனா தொற்றால் கடந்த ஓராண்டாக பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படாததால், மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டுள்ளது. அவர்களின் மன அழுத்தத்தை போக்க, கரோனா தொற்று பரவலை தடுக்கும் வழிமுறைகளை பின்பற்றி மாணவர்களுக்கு ஓவிய பயிற்சி அளித்து வருகிறோம்.

‘துரிகை’யை பிடித்து ஓவியம் படைக்கும் வழிமுறையுடன் பயிற்சியை தொடங்குகிறோம். மழை நீர் சேகரிப்பு, மரம் வளர்ப்பு, புகையில்லா உலகம் உள்ளிட்ட பல விழிப்புணர்வு ஓவியங்கள் வரிசையில் ‘கரோனா விழிப்புணர்வும்’ முக்கியத்துவம் பெற்றுள்ளது. மாணவர்களின் கற்பனை திறனை அதிகரிக்கும் வகையில், தொலைக்காட்சி மற்றும் அக்கம் பக்கத்தில் நடைபெறும் நிகழ்வுகளை மையப்படுத்தி, ஓவியம் வரைய அறிவுரை கூறு கிறோம். அவர்களும் தங்களது மனதில் பதிந்த நிகழ்வுகளை படைக்கின்றனர்.

கரோனா விழிப்புணர்வு ஓவியத்தில், ‘முகக் கவசம் அணிதல், தனி மனித இடைவெளி, தடுப்பூசி செலுத்திக் கொள்ளுதல்’ போன்றவை இடம் பெற்றுள்ளது. இதில், தடுப்பூசிக்கு அனைவரும் முக்கியத்துவம் கொடுக்க வலியுறுத்தப்படுகிறது. ஓவிய பயிற்சியை தொடங்குவதற்கு முன்பு அச்சத்துடன் காணப்பட்ட மாணவர்களின் மன நிலையில் மாற்றம் ஏற்படுவதை காண முடிகிறது. மாணவர்களின் படைப்பு களை (ஓவியம்) பார்க்கும்போதே கரோனா தாக்கத்தின் நிலையை மக்கள் எளிதாக உணர்ந்து கொள்ள முடியும்.

மாணவர்களின் படைப்புகளை காட்சிப்படுத்த ஓவிய கண்காட்சி நடத்த வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. ஊரடங்கு காலமாக இருப்பதால் நடத்த முடியவில்லை. ஓவியக் கண்காட்சி நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதிக்க வேண்டும். இதன் மூலம் மக்களுக்கு விழிப் புணர்வு ஏற்படுத்த முடியும்.

அதேபோல், ஓவியங்களை பார்த்து பாராட்டப்படும் போது, அடுத்த படைப்புகளுக்கு மாணவர்களும் ஆயத்தமாகி விடுவார் கள். ஊரடங்கில் தளர்வு கொடுக்கப்பட்டபோது, சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் பயிற்சி அளிக்கப்பட்டது. தற்போது, முழு ஊரடங்கு உள்ளதால், கரோனா விழிப்புணர்வுக்காக மாணவர்கள், தங்களது எண்ணங்களை படைப்புகளாக உருமாற்றி உயிர் கொடுத்துள்ளனர்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in