

திருநெல்வேலியில் மழையின் பாதிப்புகளில் சிக்கியவர்கள் மத்தியில் மனதை நெகிழ வைத்தவர் ராஜம்மாள் என்ற 60 வயது பாட்டி. தனது 10 வயது பேத்தி மகாகார்த்திகாவுடன் மீனாட்சிபுரம் மாநகராட்சிப் பள்ளியிலுள்ள நிவாரண முகாமில் தஞ்சமடைந்தார்.
சென்னையில் மழையால் பாதிக்கப்பட்டவர்களின் பரிதாப நிலை மனதைவிட்டு அகலாத நிலையில், திருநெல்வேலியில் மழை பாதிப்புகள் சாமானியர்களின் வாழ்க்கையை புரட்டிப்போட தொடங்கியிருக்கிறது. 1992-ம் ஆண்டில் திருநெல்வேலி சுலோச்சனா முதலியார் பாலத்தையே சேதப்படுத்தும் அளவுக்கு தாமிரபரணியில் வெள்ளம் கரைபுரண்டோடியது என்றும், அப்போது ஆற்றில் 2 லட்சம் கனஅடி தண்ணீர் சென்றதாகவும் பெரியவர்கள் கூறுகின்றனர்.
தற்போது அந்த அளவுக்கு தண்ணீர் செல்வதை கற்பனை செய்து பார்த்தாலே அச்சமாக இருக்கிறது. ஏனெனில், அப்போது இருந்ததைவிட தற்போது பலமடங்கு ஆற்றங்கரையோர ஆக்கிரமிப்புகள் அதிகரித்துவிட்டன. எனவே, பாதிப்புகளும் கடுமையாகவே இருக்கும்.
நேற்று தாமிரபரணியில் வெள்ளம் கரைபுரண்டோடியதால் மீனாட்சிபுரம் அண்ணாநகர் பகுதியிலிருந்த 25-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. அதில் ராஜம்மாளின் வீடும் ஒன்று. அப்பகுதிக்கு போலீஸாரும், மாநகராட்சி அதிகாரிகளும், வருவாய்த்துறையினரும் விரைந்து சென்று வீடுகளில் இருந்தவர்களை வெளியேற்றினர்.
அவர்களை மீனாட்சிபுரத்திலுள்ள மாநகராட்சி பள்ளி நிவாரண முகாமில் தங்கவைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஆனால் ராஜம்மாளையும், மகாகார்த்திகாவையும் தவிர்த்து வேறுயாரும் அந்த முகாமுக்கு வரவில்லை. மற்றவர்கள் தங்கள் உறவினர் வீடுகளுக்கு சென்றுவிட்டனர்.
ஆதரிக்க யாருமில்லை
நிவாரண முகாமில் இருந்த ராஜம்மாள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கவும், உணவுக்கும் மாநகராட்சி அதிகாரிகள் ஏற்பாடு செய்தனர்.
ராஜம்மாளின் இரு மகன்களும், அவரை கைவிட்டுச் சென்றுவிட்டனர். அவரது மகளும், மருமகனும் சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டனர். தனது மகள் வழி பேத்தி மகாகார்த்திகாவை இவர்தான் வளர்த்து வருகிறார். வீட்டுவேலைகளுக்குச் சென்று மகாகார்த்திகாவை பார்த்துக்கொள்கிறார். மகாகார்த்திகா மீனாட்சிபுரம் அரசுப் பள்ளியில் 5-ம் வகுப்பு படிக்கிறார்.
உறவினர்களால் கைவிடப்பட்ட நிலையில், தற்போது மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வீட்டிலிருந்து வெளியேறி நிவாரண முகாமில் தஞ்சம்புகுந்துள்ள ராஜம்மாள், தனது துயர வாழ்க்கையை அதிகாரிகளிடம் தெரிவித்தது மனதை உருக்கும் வகையில் இருந்தது. கருணையுள்ளம் கொண்டோர் கைகொடுத்து உதவலாமே.