கூடங்குளத்தில் ரூ.1.5 கோடியில் நிமிடத்துக்கு 500 லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் கூடம்

கூடங்குளத்தில் ரூ.1.5 கோடியில் நிமிடத்துக்கு 500 லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் கூடம்
Updated on
1 min read

கூடங்குளம் அரசு மருத்துவமனையில் ரூ.1.5 கோடி செலவில் நிமிடத்துக்கு 500 லிட்டர் ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் கூடத்தை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் கரோனா 3-வது அலையை எதிர்கொள்வதற்கான பல்வேறு ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது. தற்போது திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 920 ஆக்சிஜன் படுக்கை வசதிகளுடன் கரோனா சிகிச்சை மையம் உள்ளது.

2-வது அலையின்போது மாவட்டத்தில் ஆக்சிஜன் தேவைக்காக தூத்துக்குடி ஸ்டெர்லைட் மற்றும் மகேந்திரகிரி ஐஎஸ்ஆர்ஓ திரவ இயக்க உந்துமக வளாகத்திலிருந்து ஆக்ஜிசன் வரத்தை நம்பியிருக்க வேண்டிய நிலையிருந்தது. 3-வது அலை வரும் என்று எதிர்பார்க்கும் நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் மருத்துவ ஆக்சிஜன் தேவையில் தன்னிறைவை பெறவேண்டும் என்ற நோக்கத்தில் மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி கூடங்களை அமைக்க திட்டமிட்டப்பட்டது.

அதன்படி தென்தமிழகத்தில் முதன்முறையாக கூடங்குளம் அரசு மருத்துவமனையில் நிமிடத்துக்கு 500 லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் கூடத்தை அமைக்கும் பணிகள் இன்று தொடங்கப்பட்டன. ரூ.1.5 கோடி மதிப்பீட்டில் தனியார் பங்களிப்புடன் இந்த உற்பத்தி கூடத்தை மாவட்ட நிர்வாகம் அமைக்கிறது.

இதன்மூலம் 150 ஆக்சிஜன் படுக்கைகளுக்கு தங்குதடையின்றி மருத்துவ ஆக்சிஜனை வழங்க முடியும். இதுபோல் மாவட்டத்தில் சேதுராயன்புதூரில் ஒருநாளைக்கு 2400 கியூபிக் மீட்டர் மருத்துவ ஆக்சிஜனும், கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் 1680 கியூபிக் மீட்டர் மருத்துவ ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

இவை அனைத்தும் இன்னும் 10 நாட்களுக்குள் பயன்பாட்டுக்கு வந்துவிடும். இதன் மூலம் தினமும் 4800 கியூபிக் மீட்டர் ஆக்சிஜன் கிடைக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.

திருநெல்வேலி மாவட்டத்தில் கரோனா 3-வது அலையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கையாக 11 சிகிச்சை மையங்களில் 4500 படுக்கை வசதிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இதில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படுக்கைகள் ஆக்சிஜன் வசதியுடன் இருக்கின்றன. மாவட்டம் முழுக்க 600 ஆக்சிஜன் செறிவூட்டிகள் தற்போது பயன்பாட்டில் உள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in