Last Updated : 21 Jun, 2021 08:37 PM

 

Published : 21 Jun 2021 08:37 PM
Last Updated : 21 Jun 2021 08:37 PM

புதுச்சேரியில் நாளை முதல் மதுபானக்கடைகள் இரவு 9 வரை இயங்கலாம்: திரைப்பட, தொலைக்காட்சி படப்பிடிப்பு நடத்த அனுமதி

புதுச்சேரி

புதுச்சேரி கரோனா ஊரடங்கில் நாளை முதல் தளர்வு அறிவிக்கப்பட்டு மதுபானக்கடைகள் இரவு 9 வரை நடத்த அனுமதி தரப்பட்டுள்ளது. திரைப்பட, தொலைக்காட்சி படப்பிடிப்புகள் நடத்த அனுமதி தரப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, கடந்த ஏப்.24ம் தேதி முதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டு அமலில் உள்ளது. படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கரோனா ஊரடங்கு வரும் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

நாளை முதல் ஊரடங்கு தளர்வு நிலவரம்:

புதுச்சேரியில் அனைத்து திரையரங்குகள், மல்டி காம்ப்ளக்ஸ் திறக்க அனுமதி இல்லை. அனைத்து அரசு அலுவலகங்களும் வழிகாட்டு வழிமுறைகளுடன் இயங்கும். 100 சதவீதம் தடுப்பூசி போடப்பட்டுள்ளதை அனைத்து துறையினரும் உறுதிப்படுத்தவேண்டும்.

அனைத்து வணிக கடைகள் காலை 9 முதல் இரவு 9 வரை திறந்திருக்கலாம். காய்கறி, பழக்கடைகள் காலை 5 முதல் இரவு 9 வரை திறந்திருக்கலாம். அதேபோல் தனியார் நிறுவனங்கள் காலை 9 முதல் மாலை 6 வரை செயல்படலாம். தகுதியான ஊழியர்களை கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தவேண்டும்.

அதேபோல் ஹோட்டல்கள் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் இரவு 9 வரை செயல்படலாம். அதேபோல் டீக்கடைகள், ஜூஸ் கடைகளும் கரோனா வழிமுறையை பின்பற்றி இரவு 9 வரை செயல்படலாம். இவர்கள் 5 நாட்களுக்குள் கரோனா தடுப்பூசி செலுத்தியதை உறுதி செய்யவேண்டும்.

அதேபோல் மதுபானக்கடைகள், சாராயக்கடைகள் காலை 9 முதல் இரவு 9 வரை இயங்கலாம். மாநில எல்லைகளில் உள்ள கடைகளில் நெரிசல் ஏற்படாமல் பாதுகாப்பு நடவடிக்கைகளை போலீஸாரும், கலால்துறையினரும் கண்காணித்து ஈடுபடுவார்கள்.

அதேபோல் பஸ்கள், ஆட்டோ, டாக்ஸிகள் இரவு 9 வரை அனைத்து நாட்களிலும் இயங்கலாம். மருத்துவம் சார்ந்த போக்குவரத்துக்கு நாள் முழுக்க தடையில்லை. போக்குவரத்துத்துறையில் வாகன ஓட்டுநர் உரிமம் கரோனா வழிமுறைப்படி செயல்பட்டு வழங்கும் பணி துவங்கும். அதேபோல் பத்திரப்பதிவுத்துறையும் செயல்படும்.

அதேபோல் கடற்கரை சாலை, பூங்காக்கள் காலை 5 முதல் 9 வரை நடைப்பயிற்சி செல்வோருக்காக திறக்கப்படும். வழிபாட்டு தலங்கள் மாலை 5 மணி வரை மட்டுமே பக்தர்கள் தரிசனத்துக்காக திறக்கப்படும்.

திருமண நிகழ்வுகளில் 100 பேர் வரை பங்கேற்கலாம். இறுதி நிகழ்வுகளில் 20 பேர் வரை மட்டுமே பங்கேற்க முடியும். தொழிற்சாலை பணிகள், கட்டுமான பணிகள் நடக்கலாம். அதேபோல் விளையாட்டு தொடர்பான பயிற்சி நிகழ்வுகளுக்கு அனுமதி தரப்படுகிறது. திரைப்படம், தொலைக்காட்சி படப்பிடிப்புகள் நடத்த அனுமதி தரப்படுகிறது. 100 பேருக்குள் கரோனா வழிமுறையை பின்பற்றி படப்பிடிப்பு நடத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x