Last Updated : 21 Jun, 2021 05:58 PM

 

Published : 21 Jun 2021 05:58 PM
Last Updated : 21 Jun 2021 05:58 PM

ஆன்மிகவாதியான அறநிலையத்துறை அமைச்சரை அதிகாரிகள் தவறாக வழிநடத்துகின்றனர்: ஹெச்.ராஜா பேட்டி

‘‘ஆன்மிகவாதியான அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவை அதிகாரிகள் தவறாக வழிநடத்துகின்றனர்,’’ என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்தார்.

சிவகங்கையில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்புகள் குறித்து அறநிலையத்துறை அதிகாரிகள் தவறான தகவல்களை அளித்து வருகின்றனர். அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நல்ல ஆன்மிகவாதி. ஆனால் அவரை அதிகாரிகள் தவறாக வழிநடத்துகின்றனர்.

சிலதினங்களுக்கு முன்பு, சிவகங்கை கவுரி விநாயகர் கோயிலுக்கு சொந்தமாக 142 ஏக்கர் நிலம் உள்ளது. ஆனால் வெறும் 9.58 ஏக்கர் நிலத்தை மட்டும் மீட்டுவிட்டு முழுவதும் மீட்டதுபோல் கூறுகின்றனர். கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பு குறித்து நான் ஆவணங்களை வழங்கினால் நடவடிக்கை எடுப்பதாக அறநிலையத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.

ஆனால் கோயில் நிலங்களை மீட்க நீதிமன்றங்கள் வழங்கிய தீர்ப்புகளை அமல்படுத்தினாலே போதும். மேலும். முன்னாள் அமைச்சர் பொங்களூர் பழனிச்சாமியின் கலைஞர் கல்லூரி வளாகத்திலேயே கோயில் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அதையும் அமைச்சர் மீட்க வேண்டும்.

கடந்த 56 ஆண்டுகளாக இந்து கோயில்களை அழிக்கும் பணியை தான் தமிழக ஆட்சியாளர்கள் செய்து வந்துள்ளனர். அநாகரிகமான நபர் ஒருவர் துரதிர்ஷ்டவசமாக தமிழக நிதியமைச்சராகி உள்ளார். மேலும் படிப்பு, பாரம்பரியம் என தற்பெருமை பேசாமல், தமிழகத்தின் நிதியை சரியாக நிர்வாகம் செய்ய வேண்டும். தமிழக அரசுக்கு அவப்பெயர் ஏற்படாமல் இருக்க நிதியமைச்சரை முதல்வர் கண்டிக்க வேண்டும்.

தமிழகத்திற்கு காவிரி நீர் திறந்துவிடுவதை கர்நாடக அரசு தடுக்க முடியாது. காவிரி நதிநீர் பங்கீட்டில் துரோகம் செய்தது திமுக அரசே. மேகதாதுவில் புதிய அணை கட்டுவதை மத்திய அரசு அனுமதிக்க கூடாது என்ற ஆளுநர் உரையை வரவேற்கிறேன். மத்திய அரசை ஒன்றிய அரசு என்று கூறினால், தமிழக அரசை ஊராட்சிகளின் அரசு என்றா கூற முடியும்.

நீதிமன்றம் தீர்ப்பு மூலம் நீட் தேர்வு வந்ததால், அதை மாற்ற முடியாது. நீட் தேர்வு ரத்து செய்வோம் என ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களிடம் சந்தேகத்தை ஏற்படுத்த கூடாது. நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்களுக்கு அதிகளவில் இடம் கிடைத்துள்ளது. அரசியலுக்கு மத்திய அரசை எதிர்ப்பது திமுகவின் டிஎன்ஏவிலேயே உள்ளது. மாநில அரசுகள் ஒத்துழைத்தால் பெட்ரோல், டீசல் வரியை ஜிஎஸ்டிக்குள் கொண்டு மத்திய அரசு தயாராக உள்ளது,என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x