

ஆட்சி மாற்றத்துக்குப் பின்னும் வடமாநில உயர் அதிகாரிகள் பிடியில் புதுச்சேரி அரசு நிர்வாகம் சிக்கித் தவிப்பதாக புதுச்சேரி அதிமுக குற்றம் சாட்டியுள்ளது.
ஆளும் அரசின் கூட்டணிக் கட்சியான அதிமுகவின் புதுச்சேரி கிழக்கு மாநிலச் செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
''புதுச்சேரி மாநிலத்தில் புதிதாக 250க்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். இதில் அரசுப் பணிகளுக்கான வேலைவாய்ப்பு நியமன விதிகள் முழுமையாகப் பின்பற்றப்படவில்லை.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் அட்டவணை இனத்தவர்களுக்கு 18 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியுள்ளது. இதில் அட்டவணை இனத்தவர்களுக்கு உரிய இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை.
அரசுத் துறையில் பணிக்கு எந்த அடிப்படையில் ஆட்கள் நியமனம் செய்தாலும் அட்டவணை மக்களுக்கு உரிய இட ஒதுக்கீடு வழங்காமல் யார் இந்த உயரதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கினார்கள் என்ற கேள்வி எழுகிறது. அரசு அதிகாரியின் தவறான முடிவினால் அட்டவணை இனத்தைச் சார்ந்த சுமார் 50க்கும் மேற்பட்டவர்களுக்கு அங்கன்வாடி பணியில் சட்டப்படி கிடைக்க வேண்டிய வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை.
கரோனா தொற்று சம்பந்தமாக ஊரடங்கு அமலில் இருந்தபோது மதுபான, சாராயக்கடைகள், கள்ளுக்கடைகள் திறக்கக் கூடாது என அரசும் கலால் துறையும் ஆணையிட்டது. அதனடிப்படையில் சுமார் 105 நாட்கள் முற்றிலுமாக கள்ளுக்கடைகள், சாராயக் கடைகள் கலால் துறையின் மூலம் சீல் வைக்கப்பட்டு மூடப்பட்டன. இந்நிலையில் மூடப்பட்ட நாட்களுக்கு கள்ளுக்கடை, சாராயக் கடைகளுக்கு கிஸ்தி தொகையை அரசு உயரதிகாரிகள் வசூல் செய்துள்ளனர். இவ்வாறு வசூல் செய்த தொகையைத் திருப்பி வழங்க வேண்டும் என முன்பிருந்த அமைச்சரவை முடிவு செய்து அனுப்பிய கோப்பைத் தலைமைச் செயலரும், அப்போதைய துணைநிலை ஆளுநரும் அப்போது தடுத்து நிறுத்தினர்.
தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டும், இப்பிரச்சினையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்காமல் தலைமைச் செயலாளரும், நிதிச் செயலாளரும் சட்டத்திற்கு விரோதமாக மூடிய கள்ளுக்கடை, சாராயக்கடை உரிமையாளர்கள் மீது வரியைத் திணிக்கிறார்கள். இதனால், 100-க்கும் மேற்பட்ட கடைக்காரர்களிடமிருந்து ரூ.10 கோடிக்கு மேல் அரசு சட்டவிரோதமாக வசூல் செய்துள்ளது. புதுச்சேரியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும் வடநாட்டைச் சேர்ந்த உயரதிகாரிகள் பிடியில் அரசு நிர்வாகம் சிக்கித் தவிக்கிறது. இதனால் பல விஷயங்களில் மக்களின் உரிமையும் நியாயங்களும் பறிக்கப்படுகின்றன" என்று குறிப்பிட்டுள்ளார்.