கன்னியாகுமரி அரசு தோட்டக்கலை பண்ணையில் 20 வகை பாரம்பரிய வாழைக்கன்றுகள் நடவு

கன்னியாகுமரி அரசு தோட்டக்கலை பண்ணையில் 20 வகை பாரம்பரிய வாழைக்கன்றுகள் நடவு
Updated on
2 min read

குமரியின் பாரம்பரிய வாழை இனங்களைக் காக்கும் வகையில் கன்னியாகுமரி அரசு தோட்டக்கலை பழப்பண்ணையில் சுற்றுச்சூழல் பூங்கா வளாகத்தில் 20 அரிய வகையான வாழைக்கன்றுகள் நடப்பட்டன.

தமிழக அரசின் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் கீழ் இயங்கி வரும் கன்னியாகுமரி அரசு தோட்டக்கலை பண்ணை 1922ம் ஆண்டு ஸ்ரீமூலம் மகாராஜாவால் 30.64 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டது.

தற்போது கன்னியாகுமரியில் அரசு தோட்டக்கலை பண்ணை 15.64 ஏக்கர் பரப்பளவிலும், அதனோடு சேர்ந்த சுற்றுச்சூழல் பூங்கா 15 ஏக்கர் பரப்பளவிலும் உள்ளது. அரசு தோட்டக்கலை பண்ணையில் தரமான மா, சப்போட்டா, நெல்லி, மாதுளை, கொய்யா போன்ற பழச்செடிகளும், அலங்கார செடிகளும் உற்பத்தி செய்யப்பட்டு தரமான விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மேலும் இங்குள்ள உயிரி கட்டுப்பாட்டு ஆய்வகம் மூலம் உயிர் உரங்கள், உயிர் பூஞ்சாண கொல்லிகள் உற்பத்தி செய்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அத்துடன் சுற்றுச்சூழல் பூங்கா வளாகத்தில் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் மாதிரி சாக்லெட் உற்பத்தி கூடம் அமைக்கப்பட்டு சாக்லெட் தயார் செய்து விற்பனை செய்யப்படுகிறது. இங்கு தயாரிக்கப்படும் சாக்லெட்டுகளை வெளிசந்தைக்கு கொண்டு சென்று வர்த்தகம் செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பூங்காவின் முன்புறம் உள்ள தமிழ்நாடு தோட்டக்கலை வளர்ச்சி முகமை விற்பனை நிலையம் மூலம் அலங்கார செடிகள், வீட்டு காய்கறி தோட்டத்திற்கு தேவையான பொருட்கள், விதைகள் மற்றும் அரசு தோட்டக்கலை பண்ணையில் உற்பத்தி செய்யப்படும் பழங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கன்னியாகுமரி அரசு பழத்தோட்ட சுற்றுச்சூழல் பூங்கா வளாகத்தில் குமரியில் பாரம்பரிமிக்க 20 அரிய வாழைக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோதங்கராஜ் பங்கேற்று 20 வகை வாழைகன்றுகளை நட்டு செய்தியாளர்களிடம் கூறியதாவது;

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மண்வளத்தில் மருத்துவ குணங்கள் கொண்ட அரியவகை பழவகைகள் விளைந்து வருகின்றன. பழங்காலத்தில் 25க்கும் மேற்பட்ட வாழைமரங்கள் இங்கு நடவு செய்ததுடன், அதுவே பொதுமக்களின் அன்றாட உணவாக இருந்து வந்தது. தற்போது பல வாழை இனங்கள் பயன்பாட்டில் இல்லை.

எனவே அழியும் தருவாயில் இருக்கும் வாழை இனங்களை மீண்டும் அதிக அளவில் நடவு செய்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் நோக்கில் கன்னியாகுமரி சுற்றுச்சூழல் பூங்காவில் அரியவகை வாழை மரங்கள் நடவு செய்யப்பட்டுள்ளது. இங்கு சாகுபடியில் இல்லாத குமரியின் பாரம்பரிய வாழை ரகங்களான செம்மட்டி, கரும்மட்டி, கூம்பில்லா சிங்கன், பூங்கதளி, மட்டி, கற்பூரவில்லி, ஆயிரம்காய்ச்சி, மலைவாழை, நெய்பூவன், சிங்கன், பாளையன்கோட்டை, படத்தி, ரசகதளி, மொந்தன்வாழை, நாட்டு பேயன், சக்கை பேயன், வெள்ளை தொழுவன், செந்தொழுவன், நேந்திரன், நெய்கதளி போன்ற 20 வகை பாரம்பரிய வாழைக்கன்றுகள் மாவட்டத்தின் பல இடங்களில் சேகரிக்கப்பட்டு அரசு பழத்தோட்ட பண்ணையில் நடவு செய்யப்பட்டுள்ளது.

இந்த சுற்றுச்சூழல் பூங்காவை மேலும் நவீனப்படுத்தி சுற்றுலா பயணிகளை அதிக அளவில் கவரும் வகையில் தமிழக முதல்வரிடம் அனுமதி பெற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். நிகழ்ச்சியில் தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் ஷீலா, அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியகுழு உறுப்பினர் பிரேமலதா, மற்றும் அலுவலர்கள், பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in