

அமைச்சர் பதவி தரக்கோரி எம்எல்ஏ ஜான்குமார் ஆதரவாளர்கள் கருப்பு சட்டை அணிந்து பாஜக கொடி ஏந்தி கட்சி தலைமையை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்.
புதுச்சேரியில் சட்டப்பேரவை தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ்- பாஜக கூட்டணி வென்று ஆட்சியமைத்தது. முதல்வராக ரங்கசாமியும், சபாநாயகராக செல்வமும் பொறுப்பேற்றனர். தேர்தல் முடிந்து கிட்டத்தட்ட 50 நாட்களாகியும் அமைச்சரவை பொறுப்பு ஏற்கவில்லை.
பாஜகவில் அமைச்சர்களாக நமச்சிவாயம், ஜான்குமார் பெயர்கள் முன்பு தரப்பட்டு இருந்தன. பாஜகவில் இருந்த எம்எல்ஏக்கள் தங்களுக்கு அமைச்சர் பதவி கோரினர். இதையடுத்து ஜான்குமார் மீதான வழக்குகள் விவரங்களை மேலிடத்துக்கு அனுப்பத் துவங்கினர்.
குறிப்பாக, ஜான்குமார் ரூ.38 கோடியே 45 லட்சம் அரசுக்கு வரி பாக்கி வைத்துள்ளார். வருமான வரித்துறையில் 2 வழக்கு நிலுவையில் உள்ளது. மேலும் இரண்டு வழக்கு மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸில் போட்டியிட்ட போது பிரமாண பத்திரத்தில் உண்மை தகவல்களை தெரிவிக்காததால் புதுச்சேரி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இவ்விவரங்களை முழுமையாக பாஜக தலைமைக்கு பலர் அனுப்பியதால், பாஜகவில் நீண்டகாலமாக இருந்து தற்போது தனித்தொகுதியில் வென்று எம்எல்ஏவான சாய் சரவண குமாருக்கு அமைச்சர் பதவி தர பாஜக மேலிடம் முடிவு எடுத்துள்ளது.
இதையடுத்து டெல்லிக்கு தனது மகன் ரிச்சர்ட் எம்எல்ஏவுடன் ஜான்குமார் புறப்பட்டார். 3 வது நாளாக இன்றும் டெல்லியில் கட்சி தலைமையை சந்தித்து அமைச்சர் பதவிக்காக முயற்சித்து வருகிறார். ஆனால் மேலிடம் மறுத்துவிட்டது.
ஜான்குமாருக்கு அமைச்சர் பதவி தரக்கோரி அவரது ஆதரவாளர்கள், புதுச்சேரி பாஜக அலுவலகத்தை சனிக்கிழமை முற்றுகையிட்டு பேனரை கிழித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் ஜான்குமாருக்கு அமைச்சர் பதவி தரக்கோரி அவரது ஆதரவாளர்கள் கருப்பு சட்டை அணிந்து பாஜக கொடியுடன் காமராஜ் சாலையில் பெரியார் சிலை அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர். வாக்குறுதிப்படி ஜான்குமாருக்கு அமைச்சர் பதவி தரக்கோரி பாஜக மேலிடத்தை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
போராட்டத்தில் ஈடுபட்டோர் கூறுகையில், "ஜான்குமார் எம்எல்ஏவானால் அமைச்சர் பதவி தருவதாக பாஜக மேலிடம் உறுதி தந்தது. தற்போது அவருக்கு அமைச்சர் பதவி மறுக்கப்படுகிறது. வாக்குறுதியை பாஜக தலைமை நிறைவேற்ற வேண்டும். அதை வலியுறுத்தி தொடர்ந்து போராடுவோம்" என்றனர்.
இந்நிலையில் போலீஸார் அங்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டோரை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.