Published : 21 Jun 2021 01:53 PM
Last Updated : 21 Jun 2021 01:53 PM

நகைக்கடன், விவசாயக் கடன் தள்ளுபடி, பெண்கள், முதியோர் உதவித்தொகை, கல்விக் கடன் ரத்து என எந்த அறிவிப்பும் இல்லை: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

சென்னை

ஆளுநர் உரையில் திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்த 5 சவரன் நகைக் கடன் ரத்து, விவசாயிகள் பயிர்க் கடன் ரத்து, கல்விக் கடன் ரத்து, பெண்களுக்கு 1000 ரூபாய் உதவித்தொகை, முதியோர் உதவித்தொகையை 1500 ரூபாய் ஆக உயர்த்தும் திட்டம் உள்ளிட்ட எந்த அறிவிப்பும் இல்லாதது ஏமாற்றம் அளிப்பதாக எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

சட்டப்பேரவை ஆளுநர் உரைக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:

“தேர்தலுக்கு முன் பிரச்சாரக் கூட்டத்தில் பல்வேறு அறிவிப்புகளை ஸ்டாலின் அறிவித்தார். நாங்கள் ஆட்சியில் இருந்தபோது விவசாயிகள் வாங்கிய பயிர்க் கடன் ரத்து செய்யப்படும் என நாங்கள் அரசாணை அறிவித்தோம். சிலருக்கு ரத்து செய்து சான்றிதழை வழங்கினோம்.

ஆனால், திமுக ஆட்சி அமைத்து 44 நாட்கள் ஆகின்றன. ஆனால், இதுவரை விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய பயிர்க் கடன் ரத்து செய்யப்படவில்லை. தற்போது பருவமழை தொடங்கிவிட்டது. டெல்டா மாவட்டத்தில் பயிர் செய்யும் விவசாயிகளுக்குப் புதிய கடன் வழங்கப்பட வேண்டும், அதுகுறித்தும் தெளிவுபடுத்தப்படவில்லை.

மாணவர்கள் வாங்கிய கல்விக் கடன் ரத்து செய்யப்படும் என்று அறிவித்தார்கள். அதுகுறித்து எந்த அறிவிப்பும் ஆளுநர் உரையில் இல்லை. அத்துடன் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்குக் கீழ் அடகு வைத்துக் கடன் வாங்கியவர்கள் நகைக்கடன் தள்ளுபடி என்கிற அறிவிப்பும் தேர்தல் நேரத்தில் வெளியிட்டார்கள். அது என்ன ஆனது?

சுய உதவிக் குழுக்கள் கடன் தள்ளுபடி செய்யப்படும் எனத் தேர்தல் வாக்குறுதியில் இடம் பெற்றிருந்தது. அதுவும் ஆளுநர் உரையில் இல்லை. பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என்கிற அறிவிப்பும் ஆளுநர் உரையில் இடம்பெறவில்லை. அத்துடன் குடும்பத் தலைவிக்கு ரூ.1000 மாதம் தருவோம் என ஸ்டாலின் பல்வேறு கூட்டங்களில் பேசினார். ஆனால், அந்த அறிவிப்பும் ஆளுநர் உரையில் இல்லை.

அதேபோல் முதியோர் உதவித்தொகை 1000 ரூபாயிலிருந்து 1500 ரூபாயாக உயர்த்தித் தரப்படும் என அறிவித்தார். அதுவும் இடம்பெறவில்லை. கேஸ் சிலிண்டர்களுக்கு ரூ.100 மானியம் என அறிவித்தது இடம்பெறவில்லை. மீன்பிடித் தடைக்காலத்தில் மீனவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்தார். அதுவும் இல்லை.

கோதாவரி - காவிரி இணைப்புத் திட்டம் குறித்து ஒரு வரிகூட இல்லாதது விவசாயிகளுக்கு அநீதி இழைக்கப்பட்டதாக நான் நினைக்கிறேன். முக்கியமான திட்டங்கள் ஆளுநர் உரையில் இடம்பெறவில்லை.

ஆட்சி அமைத்து 44 நாட்கள் என்றாலும், இவையெல்லாம் முக்கியமான கோரிக்கைகள் என்பதால் கேட்கிறோம். சுய உதவிக் குழுவுக்கு முறையாகக் கடன் பெற்று வழங்கப்படும் என்று ஆளுநர் உரையில் அறிவித்துள்ளார்கள். ஆனால், தேர்தல் அறிக்கையில் என்ன வாக்குறுதி அளித்துள்ளார்கள்?

சுய உதவிக் குழுக்களுக்கு தேசிய வங்கிகளில் வாங்கிய கடன், கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்திருந்தார்கள். பரப்புரையிலும் அதைத்தான் பேசினார்கள். ஆனால் ஆளுநர் உரையில் அப்படி இல்லையே என்பதைத்தான் கேட்கிறோம்”.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x