Published : 21 Jun 2021 01:11 PM
Last Updated : 21 Jun 2021 01:11 PM

மத்திய அரசு வழங்கும் தடுப்பூசி போதுமானதாக இல்லை: ஆளுநர் உரை

சென்னை

தமிழ்நாட்டில் தடுப்பூசி போடும் மக்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. ஆனால், மத்திய அரசால் வழங்கப்படும் தடுப்பூசியின் ஒதுக்கீடு போதுமானதாக இல்லை. எனவே, தமிழ்நாட்டிற்கு ஒதுக்கீடு செய்யப்படும் தடுப்பூசிகளின் எண்ணிக்கையை உயர்த்திட வேண்டும் என ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டப்பேரவையில் இன்று ஆளுநர் ஆற்றிய உரை:

''இந்த அரசு பதவியேற்றபோது, தமிழ்நாட்டையும் நம் நாடு முழுவதையும் பெருமளவில் பாதித்திருந்த கோவிட் பெருந்தொற்றின் இரண்டாம் அலை மிகப்பெரும் சவாலாக அமைந்திருந்தது. வாக்குப்பதிவு முடிந்த பின்னரும் கோவிட் தடுப்புப் பணிகள் தொய்ந்திருந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை முடிவுற்றதையடுத்து, புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற கட்சித் தலைவராக இருந்தபோதே, முதல்வர் மற்ற எல்லாப் பணிகளையும் விட, கோவிட் பெருந்தொற்று நோய்க்கு எதிரான பணிகளுக்கே முன்னுரிமை அளித்தார்.

ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகள் உள்ளிட்ட மருத்துவக் கட்டமைப்பு வசதிகள் போர்க்கால அடிப்படையில் கணிசமாக உயர்த்தப்பட்டன. முன் எப்போதும் இல்லாத அளவிற்கு அதிகரித்த ஆக்சிஜன் மற்றும் உயிர் காக்கும் மருந்துகளின் தேவையையும் சிறப்பு நடவடிக்கைகள் மூலம் இந்த அரசு நிறைவு செய்துள்ளது. முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், காப்பீடு பெறப்படும் மருத்துவ சிகிச்சைகளை விரிவுபடுத்தி, ஏழை எளிய மக்கள் தனியார் மருத்துவமனைகளிலும், கருப்புப் பூஞ்சை தாக்கம் உள்ளிட்ட கோவிட் நோய்க்கான அனைத்து சிகிச்சைகளையும் பெறுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.

தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்களிடையே தயக்கம் இருந்த சூழ்நிலை அறவே மாறி, தற்போது, தமிழ்நாட்டில் தடுப்பூசி போடும் மக்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. ஆனால், மத்திய அரசால் வழங்கப்படும் தடுப்பூசியின் ஒதுக்கீடு போதுமானதாக இல்லை. எனவே, தமிழ்நாட்டிற்கு ஒதுக்கீடு செய்யப்படும் தடுப்பூசிகளின் எண்ணிக்கையை உயர்த்திட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

கோவிட் பெருந்தொற்றிற்கு எதிரான போரில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவப் பணியாளர்கள் மற்றும் முன்களப் பணியாளர்கள் பல்வேறு வகையிலும் ஊக்கப்படுத்தப்பட்டுள்ளனர். தமிழகமெங்கும் நடைபெறும் கரோனா தடுப்புப் பணிகளைத் தொடர்ந்து நேரில் சென்று ஆய்வு செய்துவரும் முதல்வர் கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் முழு உடல் கவசம் அணிந்து கரோனா சிகிச்சைப் பிரிவிற்கே நேரில் சென்று, அங்கு சிகிச்சை பெறும் கரோனா நோயாளிகளிடம் நலம் விசாரித்து, அங்கு பணிபுரியும் மருத்துவர்களையும், செவிலியர்களையும் ஊக்கப்படுத்தினார். கூடுதல் மருத்துவப் பணியாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கோவிட் பெருந்தொற்றுப் பரவலை எதிர்கொள்வதில் அயராமலும் தன்னலம் கருதாமலும் பணிபுரியும் முன்களப் பணியாளர்கள் அனைவருக்கும் அரசின் சார்பில் எனது நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். முதல்வரின் சிறப்பான முயற்சிகளினால், கோவிட் பெருந்தொற்றுப் பரவலுக்கெதிரான போரில் சமுதாயத்தின் அனைத்துப் பிரிவினரும், புலம்பெயர் தமிழர் சமுதாயத்தினரும் ஊக்கத்துடன் ஒன்று திரண்டுள்ளனர்.

பெருநிறுவனங்கள், சிறுதொழில் நிறுவனங்கள், வணிகர் சங்கங்கள், அரசுசாரா தொண்டமைப்புகள், அரசியல் கட்சிகள், கலைத்துறையினர், தன்னார்வலர்கள் என அனைவரும் கோவிட் பெருந்தொற்றை எதிர்கொள்வதில் இந்த அரசுடன் தோளோடு தோள் நின்று செயல்படுகின்றனர். இதுவரை, முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 335.01 கோடி ரூபாய் நிதியுதவி பல்வேறு தரப்பிலிருந்து குவிந்துள்ளது.

இத்தொகையில், 141.10 கோடி ரூபாய் உடனடியாகவும், வெளிப்படையாகவும், உயிர் காக்கும் மருந்துகளையும், கருவிகளையும் கொள்முதல் செய்வதற்குப் பயன்படுத்தப்பட்டுள்ள நிலையில், அரசு மருத்துவமனைகளில் திரவ மருத்துவ ஆக்சிஜன் வழங்குவதற்காக 50 கோடி ரூபாயும், கோவிட் பெருந்தொற்றின் மூன்றாம் அலை தொடர்பான முன்னேற்பாடு நடவடிக்கைகளுக்கு 50 கோடி ரூபாயும் ஒதுக்கப்படும்.

பெருந்தொற்றுப் பரவல் சூழலில் மக்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும், வருமானமின்றி பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவி வழங்க வேண்டும் என்பதையும் உணர்ந்துள்ள இந்த அரசு, மாநிலத்திலுள்ள 2.1 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 4,000 ரூபாய் நிவாரணத் தொகையை இரண்டு தவணைகளாக மொத்தம் 8,393 கோடி ரூபாய் நிதியுதவியை மே, ஜூன் மாதங்களில் வழங்கியுள்ளது.

உலகின் தலைசிறந்த பொருளாதார நிபுணர்கள் பலரும், பொருளாதாரம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ள இப்பேரிடர்க் காலத்தில் ஏழை எளியோருக்கு நேரடி நிவாரணத் தொகை வழங்குவதே சரியான நடவடிக்கை என வலியுறுத்திவரும் நிலையில், அதை ஒட்டியே தமிழக அரசும் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தி உள்ளது.
நுகர்வோர் தேவையை ஊக்குவிக்கவும், பொருளாதார சுழற்சி இயல்பு நிலைக்குத் திரும்பிடவும் இது உதவும். இது தவிர, 466 ரூபாய் மதிப்பிலான 14 வகையான அத்தியாவசிய மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்புகளும், 977.11 கோடி ரூபாய் செலவில் அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்கும் வழங்கப்பட்டு வருகின்றன.

மேலும், மே, ஜூன் மாதங்களுக்கு, மாநிலத்திலுள்ள அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களின் குடும்பத்திலுள்ள ஒவ்வொரு நபருக்கும் கூடுதலாக ஐந்து கிலோ அரிசியும் வழங்கப்பட்டு வருகிறது. இதனால், மாநில அரசிற்கு கூடுதலாக 687.84 கோடி ரூபாய் செலவு ஏற்படும். ‘ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்’ என்ற அண்ணாவின் கொள்கையை மனதில் கொண்டு செயல்படும் இந்த அரசு, கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வாழ்வாதார உதவியாக மொத்தம் 10,068 கோடி ரூபாயை இந்த அரசு பதவி ஏற்றது முதல் வழங்கியுள்ளது.

மேலும், கோவிட் பெருந்தொற்றின் மூன்றாம் அலை ஏற்பட வாய்ப்புள்ளது என மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்துள்ள நிலையில், இதைச் சமாளிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் இந்த அரசு மேற்கொள்ளும். அதற்கேற்ப, மருத்துவக் கட்டமைப்பு வசதிகள் மேலும் வலுப்படுத்தப்பட்டு வருகின்றன. 11 புதிய மருத்துவக் கல்லூரிகளை அமைப்பது உள்ளிட்ட, மருத்துவத்துறையில் நடைபெற்று வரும் அனைத்துக் கட்டுமானப் பணிகளும் விரைந்து முடிக்கப்பட்டு வருகின்றன. சென்னை கிங் மருத்துவமனை வளாகத்தில் 250 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 500 படுக்கை வசதிகளைக் கொண்ட புதிய பன்னோக்கு சிறப்பு மருத்துவமனை கட்டப்பட உள்ளது.

மாநிலத்திலுள்ள பல அரசு மருத்துவமனைகளில், ஆக்சிஜன் சேமிப்பும் உற்பத்தித் திறனும் மேலும் அதிகரிக்கப்பட்டு வருகின்றன. திரவ மருத்துவ ஆக்சிஜனையும், அது தொடர்புடைய கருவிகளையும் தயாரிக்கும் தொழிற்சாலைகளை தமிழ்நாட்டில் நிறுவுவதற்கு, தனியார் முதலீட்டாளர்களுக்கு சிறப்புத் தொகுப்புச் சலுகைகளை இந்த அரசு வழங்குகின்றது.

மாநிலங்களின் கோரிக்கைகளுக்குச் செவிமடுத்து, தேசிய அளவில் தடுப்பூசிகளைக் கொள்முதல் செய்து, அனைவருக்கும் இலவசமாக வழங்கும் கொள்கையை மீண்டும் ஏற்றுக்கொண்ட மத்திய அரசின் முடிவை இந்த அரசு வரவேற்கிறது. இந்த ஆண்டு இறுதிக்குள்ளாக, நாட்டிலுள்ள 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து மக்களுக்கும் கோவிட் பெருந்தொற்றுக்கு எதிரான தடுப்பூசியை வழங்குவதற்காக போதிய அளவில் தடுப்பூசி கிடைப்பதை உறுதி செய்யுமாறு இந்த அரசு மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றது''.

இவ்வாறு ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x