Published : 21 Jun 2021 11:02 AM
Last Updated : 21 Jun 2021 11:02 AM

திரையரங்குகளையும் திறந்து உதவுவீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது: முதல்வர் ஸ்டாலினுக்கு பாரதிராஜா நன்றி

சென்னை

தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் ஜூன் 28 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 23 மாவட்டங்களுக்கு கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. மேலும் திரைப்படம், சின்னத்திரை படப்பிடிப்புகளை 100 பேர் மட்டும் பணிபுரியும் வகையில் நடத்தலாம் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இந்நிலையில் முதல்வரின் இந்த அறிவிப்புக்கு தமிழ்த் திரைப்பட நடப்புத் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பாக அதன் தலைவர் பாரதிராஜா நன்றி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

''மக்கள் தேவைகளறிந்து செயலாற்றுவதே சிறந்த அரசின் பணியாகும். அந்த வகையில் இந்த ஆட்சியானது தாய்ப்பறவை போல செயல்படத் தொடங்கியிருப்பதை அறிந்து மகிழ்கிறோம்.

நம் மண்ணின் பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணம் உள்ளிட்ட சலுகைகள். கரோனா காலகட்டத்திலும் தீவிரச் செயலாற்றி அதன் எண்ணிக்கையை உதிர்த்தது, தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் முனைப்பெடுக்கும் இந்த அரசின் செயல்பாடுகளை மிகவும் ரசிக்கிறோம்.

சீரிய வேகத்தில் செயலாற்றும் முதல்வருக்கும் துறை சார்ந்த அரசு இயந்திரத்திற்கும் எம் நன்றிகள்.

கட்டுப்படுத்தப்பட்ட இக்கரோனா காலகட்டத்திலிருந்து மக்கள் இயல்பை நோக்கித் திரும்ப கவனமாகக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி வரும் வேளையில் திரைத்துறையும் மீளத் தளர்வுகள் அறிவித்தமைக்கு நன்றிகள்.

முடங்கிக் கிடந்து திரையரங்குகள் இல்லாமல் தவிக்கும் எம் படங்கள் ஒருபுறம். பாதி படப்பிடிப்பை முடித்து மீதி முடிக்க காத்திருக்கும் படங்கள் ஒருபுறம் எனப் பத்து மாதம் சுமக்க வேண்டிய குழந்தையை இரண்டு வருடங்கள் சுமந்தது போன்ற வலி மறுபுறம் என இருந்த நிலைக்கு உங்கள் அறிவிப்பு பெருமலர்ச்சியைத் தந்திருக்கிறது.

படப்பிடிப்பை நடத்திக்கொள்ளத் தந்த அனுமதி எங்களுக்கு மீண்டும் உயிர் பெற்றது போல உள்ளது.

மேலும், இயல்பு நிலை திரும்பும் தருணத்தில் தாங்கள் திரையரங்குகளையும் திறந்து உதவுவீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது. எங்கள் தயாரிப்பாளர்களும் வழிகாட்டல் நடைமுறையைப் பின்பற்றி கரோனா நோய்த் தொற்றை முறியடிக்கும் விதமாக தயாரிப்புப் பணிகளில் ஈடுபடுவோம் என உறுதியளிக்கிறோம்.

செய்த அனைத்து நல்லவைக்கும் நன்றிகளைத் தமிழ்த் திரைப்பட நடப்புத் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பாக தெரிவித்துக் கொள்கிறேன்''.

இவ்வாறு பாரதிராஜா கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x