

பூவை மூர்த்தி தலைமையிலான புரட்சி பாரதம் கட்சி மூலம் தனதுஅரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய கு.செல்வப்பெருந்தகை, விடுதலை சிறுத்தைகள் கட்சியில் முக்கிய பொறுப்பு வகித்தார். அண்மையில் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஸ்ரீபெரும்புதூர் சட்டப்பேரவை தொகுதி அலுவலகத்தில், பெரியார், அம்பேத்கர் படங்களு டன் ராமானுஜர் படத்தையும் வைத்துள்ளார். தற்போது காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவைக் குழு தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இந்து தமிழ் திசைக்காக அவர் அளித்த சிறப்புப் பேட்டி…
மகான் ராமானுஜர் பேரில் உங்களுக்கு எப்படி ஈடுபாடு வந்தது?
சிறுவயதில் இருந்தே அவர் மீது எங்கள் குடும்பத்துக்கு மிகுந்த ஈடுபாடு உண்டு. அவரை தெய்வமாகவே வணங்குகிறோம். அப்போது எனதுபெற்றோர், ராமானுஜர்தான் நமது தெய்வம் என்று கூறியே என்னை வளர்த்தார்கள். அதனால் என்றென்றும் போற்றத்தக்கவரான ராமானுஜரை வணங்கி வருகிறேன்.
அதன் காரணமாக அவரது வாழ்க்கை வரலாறு, அவரது கருத்துகளை படித்து வந்தேன். அதை படிக்கப் படிக்க இப்படி ஒரு மாமனிதரா என்ற எண்ணம் என்னுள் எழுந்தது. சமுதாயத்தில் மனிதர்களுக்குள் இருக்கும் சாதி வேற்றுமைகளை ஒழிக்கப் பாடுபட்டவர் என்பதால் அவர் மீது எனக்கு மரியாதை பிறந்தது.
திருக்கோஷ்டியூர் சவும்ய நாராயண பெருமாள் கோயில் கோபுரத்தில் ஏறி, எட்டெழுத்து மந்திரத்தை அனைவரும் கேட்கும் வண்ணம் உரக்கச் சொன்னவர். ஒருமுறை ராமானுஜர் குளித்துவிட்டு வரும்போது, தாழ்த்தப்பட்டவர்கள் என்றுஇழிவு செய்து ஒதுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்த பிள்ளை உறங்கா வில்லி தாசர் என்ற பக்தரின் தோள் மீது கைபோட்டுக் கொண்டு வந்தார். இதுகுறித்து ராமானுஜரிடம் அவரது சீடர்கள் வினவியபோது, “பிள்ளை உறங்கா வில்லிதாசரிடம் அகங்காரம் இல்லை. அடக்கமும் பண்பும் அவரிடம் உள்ளது” என்று கூறினார்.
இப்படி சாதிரீதியாக உள்ள சமுதாய ஏற்றத் தாழ்வுகளை நீக்க பாடுபட்டவர் ராமானுஜர். ராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டை ஒட்டி ‘இந்து தமிழ் திசை’ பதிப்பகம் வெளியிட்ட ‘ராமானுஜர் – ஆயிரம் காணும் அற்புதர்’ என்ற புத்தகத்தை தினம் படித்து வருகிறேன். என் வண்டியில் எப்போதும் இந்தப் புத்தகம் இருக்கும்.
ஸ்ரீபெரும்புதூர் சட்டப்பேரவை அலுவலகத்தில் ராமானுஜர் படம் வைத்துள்ளது குறித்து..
பெரியார், அம்பேத்கர் போன்ற தலைவர்களுக்கு எல்லாம் முன்னோடி ராமானுஜர். சட்டப்பேரவை அலுவலகத்தின் சாவியை வாங்கியதும் முதல் வேலையாக பெரியார், அம்பேத்கர் படங்களுடன் ராமானுஜர் படத்தை வைப்பதில் உறுதியாக இருந்தேன். இதற்கு முன், கட்சித் தலைவர்கள் படம்தான் அலுவலகத்தில் இருந்தது.
ராமானுஜரின் கருத்துகள் மக்களைச் சென்றடைந்துள்ளதா?
இன்றும் சேலம், விழுப்புரம் போன்ற இடங்களில் இரட்டை குவளை, இரட்டை மயானம் என்று உள்ளது. அந்தக் கொடுமைகளை சிறுவயதில் இருந்தே நான் பார்த்துள்ளேன். இறைவன் முன் அனைவரும் சமம் என்பதை உலகுக்கு உணர்த்தியவர் மகான் ராமானுஜர். பக்தியில் சமூகப் புரட்சி செய்தவர் அவர். என்றென்றும் போற்றத்தக்க தலைவராக, தெய்வமாக உள்ளவர் ராமானுஜர். அவரது கருத்துகளை இப்போதுள்ள தலைவர்கள் மக்களிடம் கொண்டு செல்லத் தவறிவிட்டார்கள்.
ராமானுஜரின் கொள்கைகளை மக்களிடம் கொண்டு செல்ல உங்களது முயற்சி என்ன?
தற்பொது சட்டப்பேரவை உறுப்பினர் ஆகிவிட்டதால், மக்கள் பணியில் அதிகமாக ஈடுபட முடிகிறது. இதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி, ராமானுஜரின் கருத்துகளை மக்களி டம் கொண்டு செல்ல முடியும். ராமானுஜர் பேரவை என்ற இயக்கத்தை தொடங்க உள்ளேன். அதன் மூலம் அனைத்து இடங்களிலும் அவரது கருத்துகளை கூறுவேன். சமுதாய ஏற்றத் தாழ்வுகளைக் களைய பாடுபடுவேன். இன்றும் பல கோயில்களில் சில சமூகத்தினரை அனுமதிப்பதில்லை. இந்த நிலை மாற வேண்டும். கண்டிப்பாக மாறும்.