ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையுடன் பேரவை கூட்டத் தொடர் இன்று தொடக்கம்

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையுடன் பேரவை கூட்டத் தொடர் இன்று தொடக்கம்
Updated on
1 min read

சென்னை வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கத்தின் 3-வது தளத்தில் சட்டப்பேரவைக் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு தொடங்குகிறது. இதில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றுகிறார்.

கரோனா பரவல் காரணமாக, எம்எல்ஏக் கள், பேரவைச் செயலக பணியாளர்கள், செய்தியாளர்கள் உட்பட அனைவருக்கும் கரோனா பரிசோதனை கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டு, பரிசோதனைகள் முடிக்கப் பட்டுள்ளன. ‘நெகட்டிவ்’ என முடிவுகள் வந்தவர்கள் மட்டுமே பேரவைக்குள் அனுமதிக்கப்பட உள்ளனர்.

ஆளுநர் ஆங்கிலத்தில் தனது உரையை முடித்ததும். அதன் தமிழ் மொழிபெயர்ப்பை பேரவைத் தலைவர் வாசிப்பார். அத்துடன் பேரவை அலுவல்கள் முடித்துக் கொள்ளப்படும்.

தொடர்ந்து, பேரவைத் தலைவர் தலைமையில் அலுவல் ஆய்வுக் குழு கூடி, ஆளுநர் உரை மீதான விவாதத்தை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து முடிவெடுக்கப்படும். பெரும்பாலும், 3 அல்லது 4 நாட்கள் வரை பேரவை அலுவல்கள் நடைபெற வாய்ப்பு உள்ளது.

திமுக அரசின் முதல் ஆளுநர் உரை என்பதால் முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000, அரசு ஊழியர்களுக்கான பங்களிப்பு ஒய்வூதிய திட்டம் ரத்து, கரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட படிகள் உள்ளிட்டவை குறித்த அறிவிப்புகள் ஆளுநர் உரையில் வெளியிடப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

இதுதவிர, திமுக அரசு மேற்கொண்ட கரோனா தடுப்பு நடவடிக்கைகள், ஆக்சிஜன் பற்றாக்குறை, மருத்துவமனை படுக்கைகள் பற்றாக்குறையை போக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆளுநர் உரையில் இடம்பெறும் என்று கூறப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in