கும்பகோணம் வந்தடைந்த காவிரி நீருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பு

கும்பகோணம் டபீர் படித்துறையில் நேற்று முன்தினம் மாலை பொங்கி வந்த காவிரிக்கு சிறப்பு ஆராதனை நடத்தியும், ஆரத்தி எடுத்தும் வரவேற்ற பொதுமக்கள். காவிரி ஆற்றில் நுங்கும், நுரையுமாக பொங்கி வந்த  நீரை பலரும் தொட்டு வணங்கினர்.
கும்பகோணம் டபீர் படித்துறையில் நேற்று முன்தினம் மாலை பொங்கி வந்த காவிரிக்கு சிறப்பு ஆராதனை நடத்தியும், ஆரத்தி எடுத்தும் வரவேற்ற பொதுமக்கள். காவிரி ஆற்றில் நுங்கும், நுரையுமாக பொங்கி வந்த நீரை பலரும் தொட்டு வணங்கினர்.
Updated on
1 min read

டெல்டா பாசனத்துக்காக காவிரியில் திறக்கப்பட்ட தண்ணீர் நேற்று முன்தினம் மாலை கும்பகோணத்துக்கு நுங்கும், நுரையுமாக பொங்கி வந்ததையடுத்து, காவிரி நீருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டதுடன், காவிரி தாய்க்கு நன்றி தெரிவித்து சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.

டெல்டா பாசனத்துக்காக ஜூன் 12-ம் தேதி மேட்டூரிலும், தொடர்ந்து, ஜூன் 16-ம் தேதி கல்லணையிலும் தண்ணீர் திறக்கப்பட்டது. காவிரி ஆற்றில் தண்ணீ்ர் திறந்துவிடப்பட்டதை அடுத்து, கும்பகோணத்தில் கல்யாணராமன் படித்துறை, டபீர் படித்துறை, பகவத் படித்துறைகளில் தேங்கியிருந்த குப்பையை நகராட்சியின் தூய்மைப் பணியாளர்கள் கடந்த சில நாட்களாக அகற்றி சுத்தம் செய்தனர்.

தொடர்ந்து, காவிரி ஆற்றில் கல்லணையில் திறக்கப்பட்ட நீர் நேற்று முன்தினம் மாலை கும்பகோணத்துக்கு வந்தது. அப்போது, டபீர் படித்துறையில் காவிரி தாய்க்கு சிறப்பு ஆராதனைகள் நடத்தப்பட்டன. மேலும், காவிரி ஆற்றில் நுங்கும், நுரையுமாக பொங்கி வந்த நீரை பலரும் தொட்டு வணங்கினர்.

தொடர்ந்து, படித்துறையில் மாக்கோலமிட்டு, கலசம் வைத்து, ஆராதனை செய்து காவிரியின் புகழ் போற்றி பாடப்பட்டது. மேலும், கைலாய வாத்தியங்கள், சங்கொலி முழங்க, மஞ்சள், குங்குமம், மலர்கள் தூவி, காவிரிக்கு புத்தாடை ஒன்று படைக்கப்பட்டு, தீப ஆரத்தி எடுத்து வரவேற்றனர். மேலும், நீர்வளம், நிலவளம் பெருக, விவசாய வளம் தழைக்க பிரார்த்தனை செய்யப்பட்டது.

இந்நிகழ்வில், அகில பாரதிய சந்நியாசிகள் சங்க தஞ்சாவூர் மண்டல பொறுப்பாளர் சுவாமி கோரஷானந்தர், தென்பாரத கும்பமேளா கும்பகோணம் மகாமக அறக்கட்டளை செயலாளர் வி.சத்தியநாராயணன், செம்போடை வீரனார் சேவா அறக்கட்டளை பொறுப்பாளர் கோவி.நீலமேகம், காவிரி அன்னை பவுர்ணமி திருநாள் வழிபாட்டுக் குழு உறுப்பினர் பால.சண்முகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதேபோல, மணஞ்சேரியிலும் காவிரி நீருக்கு அப்பகுதியினர் தீப ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in